விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது டி.எடப்பாளையம். இந்த கிராமத்தில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் அப்துல் ஜபார் என்பவர் கடந்த 27.06.2018 மாலை அவருக்கு சொந்தமான வயல்வெளி வீட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக திருவெண்ணைநல்லூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.விஜயகுமார் மேற்பார்வையில், உளூந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பி.இராஜேந்திரன் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் தணை கண்காணிப்பாளர் டி.வீமராஜ் ஆகியோர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் ஜோகிந்தர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நடராஜன், பிரகாஷ், அகிலன், சிவசந்திரன், திருமால் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இரண்டு மாதங்களாக நடந்த விசாரணையில் மோகன், ரவி, செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடம் இருந்து இன்னோவா கார், பஜாஜ் பல்சர் பைக் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய இரண்டு கத்திகள் கைப்பற்றப்பட்டது.
இந்த கொலை வழக்கில் மோகன் என்பவர் மூளையாக செயல்பட்டும், சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளார். இவர் எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஐந்து மணல் அடிக்கும் லாரிகளை வைத்துள்ளார். இவரின் தம்பி ரவி, இந்த லாரிகளை நிர்வகித்து வருகிறார். மணல் அடிக்கும் தொழிலுக்கு துணையாக இருந்துள்ளார். செல்வம், மோகனின் கார் மற்றும் லாரி டிரைவராக இருந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட அப்துல் ஜப்பார், மோகனின் மணல் அடிக்கும் தொழிலுக்கு இடையூராக இருப்பதாகவும், அவ்வப்போது போலீசாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் கூறி தனது தொழிலுக்கு இடையூறு செய்வதாகவும் இதனால் பலமுறை பிடிப்பட்டு அவரால் மோகன் சிறைக்கு சென்றுள்ளார்.
இதனால் அப்துல் ஜப்பார் உயிருடன் இருக்கும் வரை நாம் தொழில் செய்ய முடியாது என்று மோகன், ரவி, செல்வம் ஆகியோர் கூடி பேசியதுடன், அவரை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் தங்களது திட்டத்தை நிறைவேற்ற மோகனின் தாய் மாமன் மகள் வழி பேரனான பெங்களுர் கே.ஆர்.புரம் கூலிப்படையை சேர்ந்த திலீப்குமார் என்பவரை சம்பவத்தன்று வரவழைத்துள்ளனர். திட்டமிட்டப்படி அப்துல் ஜப்பாரை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
திலீப்குமார் 08.06.2018 அன்று பெங்களூர் கே.ஆர்.புரம் போலீசில் சரண் அடைந்தான். இதையடுத்து பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மோகன், ரவி, செல்வம் ஆகியோர் உளூந்தூர்பேட்டை ஜெ.எம். 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.