கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு (72) காலமானார்.
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மூச்சுத்திணறல் காரணமாக கடந்த அக்டோபர் 14- ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் கரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில் கரோனா இருப்பது உறுதியானது.
அதைத் தொடர்ந்து அமைச்சருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று (31/10/2020) இரவு 11.10 மணியளவில் காலமானார்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 2006- ஆம் ஆண்டு முதன் முறையாக சட்டப்பேரவைக்கு துரைக்கண்ணு தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 2011 மற்றும் 2016- ஆம் ஆண்டு என மூன்று முறை தேர்வு செய்யப்பட்ட அவரை வேளாண்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக்கினார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணு படத்தின் முன் மலர்வளையம் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.மரியாதை செலுத்தும் முன் அமைச்சர் துரைக்கண்ணுவின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் கூறினார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்டோரும் அமைச்சருக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அமைச்சர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.