வருமான வரி வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரம் எம்.பி.யை விடுவித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், கடந்த 2015- ஆம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த 7 கோடியே 37 லட்சம் ரூபாய் வருமானத்தை மறைத்ததாகக் கூறி, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை கடந்த 2018- ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி, கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று (11/12/2020) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகளை முடிக்கும் முன்னரே வழக்குப்பதிவு செய்தது செல்லாதது என கூறி வழக்கிலிருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதியை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.