Skip to main content

மனைவியின் மீது சந்தேகம்; கணவர் வெறிச்செயல்

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

kallakurichi husband and wife issue 

 

மனைவி மீதான நடத்தையில் சந்தேகப்பட்டு தலையில் குழவிக் கல்லைப் போட்டுக் கொலை செய்த கணவரின் செயல் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே  உள்ள எலவனாசூர் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 35). இவருக்கு 13 ஆண்டுகளுக்கு முன் நம்பிகுளம் பகுதியைச் சேர்ந்த செண்பகம் என்பவருடன் திருமணம் நடந்து இத்தம்பதிக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், பச்சமுத்து பிழைப்பிற்காக கேரள மாநிலத்திற்குச் சென்று கொத்தனார் வேலை செய்து மனைவிக்கு பணம் அனுப்பி வந்துள்ளார்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்துள்ளார் பச்சமுத்து. அப்போது முதல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வர ஆரம்பித்துள்ளார். தினசரி குடித்து விட்டு வருகிறாயே? என்று வீட்டில் உள்ளவர்கள் கேட்டபோது, மனைவி மீது நடத்தையில் சந்தேகம் உள்ளதாகவும், அதன் காரணமாக குடிப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் நேற்றும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார் பச்சமுத்து.

 

இந்த நிலையில், அன்று இரவு மனைவி செண்பகம் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது விடிய காலை 3 மணி அளவில் வீட்டில் இருந்த குழவிக் கல்லைத் தூக்கி மனைவியின் தலையில் போட்டுள்ளார். இதனால், தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் செண்பகம் கிடந்துள்ளார். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் செண்பகத்தை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செண்பகம் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எலவனாசூர் கோட்டை போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

 

செண்பகத்தின் தாயார் கொளஞ்சி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப் பதிவு செய்து மனைவியைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய பச்சமுத்துவை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கேரளாவுக்கு தப்பிச் செல்லும் போது வாழவந்தான் குப்பம் கிராமத்தின் அருகில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். போலீசாரிடம் பச்சமுத்து அளித்த வாக்குமூலத்தில், "கேரளாவில் இருந்து வந்தது முதல் நான் கூறிய எந்த விஷயத்தையும் என் மனைவி காதில் வாங்கவில்லை. அவர் நடத்தை மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் அவள் தலையில் குழவிக் கல்லைப் போட்டுக் கொலை செய்தேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்