அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகி பெரும் சர்ச்சைகள் எழுந்து முடிந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
அதிமுகவின் பொதுச்செயலாளரான பிறகு சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இ.பி.எஸ். அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேசினார். அப்போது அவர், “பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது. அண்ணாமலை பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். கூட்டணியை நிர்ணயிக்கக் கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை கூட்டணி என்றால் பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா இவர்களோடுதான் பேசிக் கொண்டிருக்கிறோம். 2019ல் இவர்களுடன் பேசினோம். 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இவர்களுடன் தான் பேசினோம். இங்க இருக்கக்கூடிய மாநில தலைவர்களிடம் எல்லாம் பேசவில்லை” என்று பேசி இருந்தார்.
இந்நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேற்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் பாஜகவில் உள்ள மாநில தலைவர்கள் அதிகாரம் அற்றவர்கள் எனவும் டெல்லியில் உள்ள பாஜக தலைமையே கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் என எடப்பாடி பேசி இருப்பது பற்றி கேள்வி எழுப்பினர் .
இதற்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலளிக்கையில், "இது பற்றி எந்த கருத்தும் நான் கூற முடியாது. ஏனென்றால் நான் தற்போது பாஜக தலைவர் இல்லை. ஆளுநராக இருக்கிறேன். எனவே அரசியல் குறித்து கருத்துக்கள் சொல்ல முடியாது. எல்லாருக்கும் கருத்து தெரிவிக்க உரிமை இருக்கிறது. அதனால் அவரும் கருத்து சொல்கிறார். நான் கட்சி சாராதவள். என்னை பொறுத்தவரை நான் பாஜகவின் தலைவராக இருந்த போது கூட்டணி கட்சி தலைவர்களிடம் எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. நான் இப்போது கட்சியில் உள்ள சூழ்நிலை பற்றி எந்த கருத்தும் கூற முடியாது. இதுபற்றி இப்போது உள்ள தலைவர்களிடமே கேட்கலாம்" என்றார்.