இன்று தூத்துக்குடி கோவில்பட்டி கழுகுமலை அருகிலுள்ள கழுகாசலமூர்த்தி கோவிலில் சாமி தரிசனத்துடன் தேர்தல் பரப்புரையை பாஜக கட்சியின் மாநில தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கினார்.
தரிசனம் முடித்த கையோடு அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,
நேற்று இங்கு பரப்புரை மேற்கொண்ட கனிமொழி கடந்த 5 ஆண்டுகளாக மோடி எதுவும் செய்யவில்லை என பொய் பிரச்சாரம் செய்துள்ளார். இந்த மண்ணை பாதிக்கக்கூடிய, மக்களுக்கு வேண்டாம் என வெறுக்கும் எந்த தொழிற்சாலைகளையும் இங்கே மக்கள் அனுமதி இல்லாமல் செயல்பட விடமாட்டோம்.
தமிழர்களை பாதுகாப்பதற்கு இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமாம். திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்த போதுதான் அங்கு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். ராஜபக்சே அவரது அறிக்கையில் சொல்லியிருக்கிறார் காங்கிரஸ் திமுக துணையோடுதான் இது நடைபெற்றது என்று. ராஜபக்சேவை நேரில் சந்தித்து அவரிடம் பரிசு வாங்கிய கனிமொழி இப்போது தமிழர்களை காப்போம் என்கிறார்.
வர வர ஸ்டாலின் மோடியை பற்றி மிகவும் தரம்தாழ்ந்த வார்த்தைகளில் விமர்சித்து வருகிறார். அதற்கு என் கடும்கண்டனத்தை முன்வைக்கிறேன். மோசடி பேர்வழிகள் மோடியை மோசடி பிரதமர் எனக்கூறுவதை எப்படி ஏற்கமுடியும். நீங்கள் எதை சொன்னாலும் தமிழ் மக்கள் ஏற்கப்போவதில்லை. ஒருபோதும் நீங்கள் முதல்வராக முடியாது. நீங்கள் பரிந்துரைக்கும் ராகுல் பிரதமராக முடியாது.
தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்றால் பாஜக அதிமுக கூட்டணிக்கு வாக்கு செலுத்துங்கள் எனக்கூறிய தமிழிசை பிரச்சார வாகனத்தில் ஏறி கடம்பூர் ராஜுவுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்.