வைகோ என்ன தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பிரதிநிதியா? தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது என்று பாஜக சொல்லியிருக்கிறது. தமிழக அரசு இதனை முறையாக அணுகியிருக்கிறது. இப்போதைக்கு திருச்சியில் திமுக தலைமையிலான போராட்டத்தின் அவசியம் என்ன?
போராட்டத்தில் மோடியை உள்ளே விடமாட்டோம் என வைகோ கூறியுள்ளார். அறிவாலயத்திற்குள் உள்ளே விடுவார்களா இல்லையா என்று சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கிறார் வைகோ. வைகோ என்ன தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பிரதிநிதியா?
தமிழக மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் பிரதமர் வருவார். தமிழக மக்களின் அத்தனை கூட்டங்களிலும் பங்கு பெறுவார்கள். மக்களின் துன்பத்தோடு பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதால்தான் கஜா புயல் துவங்கிய முதல் நாளே முதல் அமைச்சருடன் பேசியிருக்கிறார்.
மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் வந்திருக்கிறார்கள். நான் ஏறக்குறைய 7, 8 நாட்கள் தங்கியிருந்தேன். எங்கள் கட்சியின் தொண்டர்கள் அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஸ்டாலின் அவர்கள் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு எத்தனை நாட்கள் சுற்றுப் பயணம் செய்தார்?. கலைஞரை தேர்ந்தெடுத்த திருவாரூர் பகுதி எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அங்கு தெருத் தெருவாக சென்றார்களா? வைகோ எத்தனை நாள் சென்றார்?. ‘
முழுமையாக மக்களின் துன்பத்தோடு பங்கெடுத்துக்கொண்டிருக்கின்ற மத்திய ஆட்சியை தொடர்ந்து குறைக்கூறிக்கொண்டிருக்கிறார்கள். மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. இழந்த தென்னை மரங்களை மறு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தென்னை விவசாயிகளுக்காக நடந்த கருத்தரங்களில் நான், சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டோம். சேதமடைந்த படகுகளை மறுசீரமைப்பது குறித்த ஆலோசனையில் மீனவர்களுடன் கலந்து கொண்டோம். மக்களை மீட்டெடுக்க முயற்சி செய்கிறபோது, எதிர்மறை அரசியலை ஸ்டாலின் குழுவினர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மழையே பெய்யவில்லை. புல்லே வளரவில்லை. தாமரை எப்படி மலரும் என்று ஸ்டாலின் பேசுகிறார். அவர் பேசி முடித்தவுடன் மழை வருகிறது. தாமரை மலரப்போகிறது. இயற்கையாக மழைவரவில்லை என்றால், இன்றைக்கு உள்ள தொழில்நுட்ப உதவியுடன் செயற்கையாக மழையை வரவழைத்து குளங்களை நிரம்ப செய்து தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இவ்வாறு கூறினார்.