Skip to main content

“மேயர் விருப்பமா... நேயர் விருப்பமா...” - தமிழிசை சவுந்தரராஜன்

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

chennai mayor viral video -Tamilisai

 

'மாண்டஸ்' புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காசிமேடு துறைமுகத்திற்கு வந்த பொழுது அவரது கான்வாய் வாகனத்தில் சென்னை மேயர் பிரியாவும், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும், சட்டமன்ற உறுப்பினர் எபினேசரும் தொங்கியபடி பயணித்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.

 

இதுகுறித்து மேயர் சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்ட போதிலும், சென்னை மேயர், மாநகராட்சி ஆணையர், சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி செல்வகுமார் என்ற சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கு இணையம் வாயிலாகப் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், “சாதாரண மக்கள், பள்ளி மாணவர்கள் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் ஃபுட் போர்ட் அடித்தால் எப்படி சட்டவிரோதமான செயலோ, அதேபோல் இந்தச் செயலும் சட்டவிரோதமானது. மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் பிரிவு 93 கீழ் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை மீறி ஆபத்தை உணராமல் சாலை விதிகளைக் காற்றில் பறக்க விட்டுள்ளனர். இதுவே பொதுமக்கள் இவ்வாறு நடந்து கொண்டிருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு ஒரு விதி, அரசு அதிகாரிகளுக்கு ஒரு விதியா?” எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழிசை, “இது என்ன மேயர் விருப்பமா, நேயர் விருப்பமா” எனத் தெரிவித்தார். அதே நேரம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இது குறித்த கேள்விக்கு, “கான்வாயில் ஆணுக்கு நிகராகச் சென்ற பெண்மேயரின் பணியைப் பாராட்ட வேண்டுமே தவிர, விமர்சிக்கக் கூடாது. மேயர் காரில் தொங்கியபடி சென்றது துடிப்பான செயல்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்