நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அண்மையில் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம் அதுவரை கட்சியினர் கட்சிக் கொடியை முறையாக அனுமதி பெற்று ஏற்றிக் கொண்டாடுங்கள் என விஜய் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து செப்.23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாகவும் அதற்காக பாதுகாப்பு மற்றும் அனுமதியை த.வெ.க கோரியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாட்டிற்கான அனுமதிகோரி கடந்த மாதம் 28 ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், கடந்த 1ஆம் தேதி மாநாடு தொடர்பான 21 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை நடத்தி இன்றுக்குள் (04-09-24) பதிலளிக்க தமிழக வெற்றிக் கழகம் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “சென்னையில் கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரே நாளில் அனுமதி பெற்று உடனே நடத்தமுடிகிறது. ஆனால், புதிய கட்சி தொடங்கிய விஜய், ஒரு மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டால், அதிகாரிகள் விடுமுறையில் சென்றிருக்கிறார்கள் என்று அலைக்கழித்து 21 கேள்விகள் என்று கேட்டு பிரச்சனை செய்கிறீர்கள். புதிதாக ஒருவர் கட்சி தொடங்கி மாநாடு நடத்துவதற்கு ஒரு இடத்தை கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? ஏன் அவ்வளவு பயம்?
விஜய்யின் கட்சியைத் தடுப்பது போன்று திரைக் காட்சிகளையும் தடுப்பதாகக் கேள்விப்பட்டேன். விஜய்யின் கட்சியின் மீது எங்களுக்கு எந்தவிதமான அக்கரையும் இல்லை. விஜய்க்கு ஆதரவாகவும் இல்லை. புதிதாக ஒருவர் வருகிறார், வரட்டும். எல்லோரும் களத்தில் இருப்போம். மக்கள் யாருக்கு ஆதரவு தருகிறார்களோ தரட்டும்” என்றார்.