இன்று சென்னை பசுமைவழி சாலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசுகையில்,
பல கட்சிகளோடு சேர்ந்துதான் தொகுதி பங்கீடு இருக்கும். எனவே கால அவகாசம் இருக்கிறது. ஒன்றும் கவலையில்லை, ஆனால் எதிரணியினர் பயங்கரமான பதற்றத்தில் உள்ளனர். நேற்றைய தினம் என்.டி.ஏவா அல்லது அதிமுகவா என பெரிய விவாதமே நடைபெற்றது. எங்கோ போய் ஏதவாது பிரச்சனையை குழப்பலாம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றும் பிரச்சனையில்லை. தேசிய அளவில் பிரதமர் மோடிதான் தலைவர். தமிழகத்தை பொறுத்தமட்டில் அதிமுகத்தான் பிரதான கட்சி. எனவே அதிமுக கூட்டணியில் பாஜக பங்கேற்றுள்ளது.
தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இணக்கமான சூழ்நிலை உருவாகும் என்று நினைக்கிறேன். அவர்கள் தேசப்பற்று உள்ளவர்கள். தேசப்பற்று உள்ளவர்கள் மோடியைத்தான் தலைவராக ஏற்பார்கள். அரசியல் தலைவர்கள் பலர் விஜயகாந்த்தை சந்திப்பது அவரது உடல்நலம் தேறுவதற்கே தவிர தேர்தலுக்கல்ல. பழங்களும் பழுத்துக்கொண்டுதான் இருக்கிறது மலர்கள் மலர்ந்து கொண்டுதான் இருக்கிறது மகிழ்ச்சியாக வெற்றியையும் மலரத்தான் செய்யப்போகிறோம். தற்போது முதல்வரை சந்தித்து நாளை நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் விரைவில் தமிழகம் வரும் பிரதமர் தொடர்பான நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனை நடத்தினேன் என்றார்.
மீண்டும் மோடி தமிழகம் வர உள்ளார் ஆனால் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.