தாய் மொழியான தமிழ் மொழியை மொழிப் படமாக எடுத்து படிக்காமல் அரசு பள்ளிகளில் பல பேர் ஆசிரியர்களாக நம் தமிழ்நாட்டில் தான் பணியாற்றி வருகிறார்கள். அப்படிப்பட்ட அந்த ஆசிரியர்களின் பெயர் பட்டியலை சேகரித்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக்கல்விதுறை சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறது.
நமது தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பில் தமிழ் மொழியை மொழிப் படமாக கட்டாயம் படித்திருக்க வேண்டும். இதுசட்ட விதிகளில் ஒன்று. அப்படி அவர்கள் படிக்காமல் ஆங்கிலம் அல்லது பிற மொழியை படித்தவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியில் சேரும் பட்சத்தில் பணிக்கு சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் மொழி இரண்டாம் நிலைத் தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக உள்ளது. இந்த நிபந்தனையின் அடிப்படையில்தான் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படுகிறது.
இதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் தமிழ்மொழி படிக்காமல் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பெயர் பட்டியலை முழுமையாக சேகரித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து தமிழ் படிக்காத ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அந்தந்த பள்ளிகள் தயாரித்து அனுப்பி வருகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் தமிழ் படிக்காத ஆசிரியர்களின் விபரங்கள் அந்தந்த மாவட்டங்களில் எடுக்கப்பட்டு மாநில கல்வித்துறைக்கு அனுப்பப்படுகிறது.