சிதம்பரத்திலுள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கட்கிழமையன்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 10 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையக் கட்டடம், ரூ. 1 கோடியில் ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டடம் கட்டுவதற்கான வரைபடத்தை ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ரூ. 2 கோடியே 70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவினை தொடங்கி வைத்தனர்.
பின்னர், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவர் மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி தலைமைத் தாங்கினார். இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “இந்தப் பல்கலைக்கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. பல அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அறிஞர்களையும் உருவாக்கிய பல்கலைக்கழகம் இதில் பயின்றவர்தான் முன்னாள் அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான மறைந்த க.அன்பழகன். தற்போதுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பொன்முடியின் மகன் கௌதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் அறிஞர்களையும், மருத்துவர்களையும் உருவாக்கி உள்ளது.
2011 இல் கலைஞர் முதல்வராக இருந்தபோது மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என அனுமதி பெற்று அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. புதியதாகத் தொடங்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரிகள் புதிதாகத் தொடங்க வேண்டும். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியைத் தொடங்க முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்தக் கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இதனை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ரூ. 113 கோடி மாணவர்களுக்கு கட்டணச்சலுகை அளிக்கப்பட்டது. தற்போது பயிலும் மாணவர்களுக்கு மற்ற அரசு மருத்துவக் கல்லூரி போல் கல்விக் கட்டணம் ரூ.13,000 மட்டுமே. இந்தக் கல்லூரியில் நரம்பியல் மற்றும் இருதய சார்ந்த நோய்களுக்கு மருத்துவர்களை நியமித்து பல்நோக்கு மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக உதவி மருத்துவ கல்வி இயக்குநர் சாந்தாராம் தலைமையில் நான்கு பேர் அடங்கிய குழு அமைத்து இந்தக் கல்லூரியில் மருத்துவர்கள், ஊழியர்கள், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தும் விதமாக இந்தக் குழு ஒரு மாதம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.
மருத்துவக் கல்வியை தமிழில் பயிலும் விதமாக 13 மருத்துவப் பாடப் புத்தகங்கள் தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் வரும் 16 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடுகிறார். அதேபோல் பொறியியல் துறையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 10 புத்தகங்களையும் வெளியிடுகிறார். தமிழகத்தில் 92 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதனால் கடந்த 7 மாதங்களாக கொரோனா உயிரிழப்பு இல்லை. உருமாறிய கொரானா வந்தால் அதனைச் சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், “கடலூர் மாவட்டத்திற்கு மின்தடையில்லாமல் மின்சாரம் வழங்க அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டில் இல்லாத 20 ஏக்கர் நிலத்தைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த மருத்துவக் கல்லூரியில் மயிலாடுதுறை, நாகை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் சிகிச்சைக்காக அண்டை மாநிலமான புதுவைக்குச் செல்லாத வகையில் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும்” எனப் பேசினார்.
அதைத் தொடர்ந்து சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் ஆகியோர் மருத்துவமனை வளர்ச்சி குறித்துப் பேசினார்கள். நிகழ்ச்சியில் மருத்துவக்கல்வி இயக்குநர் சாந்திமலர், அண்ணாமலைநகர் பேரூராட்சி மன்றத் தலைவர் பழனி, முன்னாள் எம்எல்ஏ சரவணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கிள்ளைரவீந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சென்னையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் மருத்துவ மாணவர்களுக்கு, மருத்துவப் பாடப் புத்தகங்களை தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்படவுள்ளது, மாணவர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.