காவலர் பணிக்கான எழுத்துத் தேர்விலும் 'தமிழ் தகுதித் தேர்வு' கட்டாயம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் இன்று (02/02/2022) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "காவலர் பணிக்கான எழுத்துத் தேர்விலும் 'தமிழ் தகுதித் தேர்வு' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே காவல் பணிக்கான எழுத்துத் தேர்வு கணக்கில் கொள்ளப்படும். உதவி ஆய்வாளர் பணிக்கானத் தேர்வுக்கும் 'தமிழ் தகுதித் தேர்வு' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் தகுதித் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு தனியாக நடத்தப்படும். நடைமுறையில் உள்ள உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, வழக்கம் போல் நடைபெறும். தமிழ் தகுதித் தேர்வு மதிப்பெண், காவலர் பணியில் தேர்ந்தெடுப்பதற்கு தகுதித் தேர்வு மதிப்பெண்கள் தரவரிசை பட்டியலில் இடம்பெற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே அடுத்தக்கட்ட விடைத்தாள் திருத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.