காயிலான் கடைச்சரக்காய் இருக்கும் பேருந்துகள் தவிர்த்து, சரி பாதிக்கு மேல் பணிமனைகளுடன் பேருந்துகளும் அடமானத்தில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகமே நஷ்டமான வேளையில் கூடுதலாய் ஓடாத ஜீப்பிற்கு ரூ.1.25 லட்சத்திற்கு டீசல் போட்டதாய் கணக்குக் காண்பித்து ஆட்டையப் போட்டுள்ளனர். பணிமனையிலுள்ள அதிமுக-வினர் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது பரப்பரப்பை உண்டாக்கியுள்ளது.
திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று கிளைகளை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டலத்தில் புளியங்குடி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, விளாத்திக்குளம், தூத்துக்குடி நகர், புறநகர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திசையன் விளை, வள்ளியூர், நெல்லை தாமிரபரணி, நெல்லை புறநகர், கே.டி.சி.நகர், சேரன்மகாதேவி கூனியூர், பாபநாசம், தென்காசி மற்றும் செங்கோட்டை என பல பணிமனைகள் உள்ளன.
இதில் புளியங்குடி பணிமனைக்கு சொந்தமான ஜீப் TMN 6903ல் தான் ஊழலே நடந்துள்ளது. இந்த புளியங்குடி பணிமனையில் நகர் மற்றும் புறநகரில் சுமார் 55 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கிளை மேலாளர், பொறியாளர், அலுவலக ஊழியர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் என 400க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பெரும்பாலும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வேலைக்குப் போகாமலே கட்சி வேலையை கவனித்து வருவதாக பணிக்கு வராமலே ஓ.பி.அடிப்பதும் உண்டு. பெரும்பாலும் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படாது இந்த விவகாரம். ஆனால் இந்த பணிமனைக்கு சொந்தமான TMN 6903 ஜீப் கடந்த டிசம்பரிலே காலாவதியான, பயன்பாட்டிற்கு உதவாத ஜீப் என முத்திரைக் குத்தப்பட்டு நெல்லை கே.டி.சி.நகரிலுள்ள பணிமனையில் கிடப்பில் போடப்பட்டிருக்க, அதற்கு டீசல் போடப்பட்டதாக ரூ.1.25 லட்சம் செலவானதாக ஆட்டையப் போட்டது தான் அதிமுக-வினரையும், கிளை அதிகாரிகளையும் கிறுக்குப் பிடிக்க வைத்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உண்மையை வெளிக்கொணர்ந்த வாசுதேவநல்லூரை சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர் கணேசனிடம் பேசினோம்., "ஓடாத ஜீப்பிற்கு டிரைவராக புளியங்குடியை சேர்ந்த அதிமுகவை சேர்ந்த டிரைவர் ராஜ்மோகன் செயல்படுகின்றார் என டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கையெழுத்திடும் டூட்டி சார்ட்டில் பார்த்தேன். டூட்டி சார்ட்டில் அவருடைய எண்ணான 7893ஐ குறிபிட்டு, அந்த ஜீப்பில் தான் டிரைவராக இருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுங்கட்சிக்காரங்க இந்த மாதிரி இருப்பது வழக்கமான ஒன்று என்றாலும், அப்ப அந்த ஜீப்பின் நிலை என கண்டறிய ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள்ளான டூட்டி சார்ட்டை ஆர்.டி.ஏ. மூலம் கேட்டேன். புளியங்குடி கிளைக்குக் கேட்டதிற்கு பதில் சங்கரன்கோவில் கிளைக்கு பதில் தந்தார்கள். தொடர்ந்து விடாமல் கேட்க இப்பொழுது பதில் வந்துள்ளது. ஓடாத அந்த ஜீப்பிற்கு ரூ.1.25 லட்சம் டீசல் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுவே இப்படியென்றால் தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள்..?" என நம்மை அதிர வைத்தார் அவர்.
ஊழலில் திளைத்துள்ள இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தினை மீட்பர் யார்..?