மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியம், ஒத்தக்கடை ஊராட்சியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக தமிழ்நாடு மாநில அளவில் 31,220 மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த 3,74,277 மகளிருக்கு ரூ.2874.26 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகள் வழங்கும் பணிகளை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (09.09.2024) தொடங்கி வைத்தார். மேலும் மதுரை மாவட்டத்தில் வருவாய்த் துறையின் மூலம் 12,233 பயனாளிகளுக்கு ரூபாய் 75 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 1013 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் கடன் இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் ரூ.298 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளியில படிக்கிற மாணவிகள், உயர்கல்வி சேரும் போது அவங்களுக்கு மாதம் 1000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி சேரும் போதும் மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகிற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்துள்ளார். மாநில அளவில் இந்த இரண்டு திட்டங்கள் மூலமாக, கிட்டத்தட்ட 7 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு, இந்த ஒரு வருடத்தில் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் மாதம் 1000 ரூபாய்னு, தலா 12 ஆயிரம் பெற்று பயனடைந்துள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் 4 லட்சத்து 62 ஆயிரம் மகளிர் பயனடைந்து வருகிறார்கள். இத்தகைய திட்டங்களால், தமிழ்நாட்டு மகளிர் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். இந்திய அளவுல பணிக்கு செல்லும் மகளிர், 42 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதற்கு திராவிட அரசின் திட்டங்கள் தான் காரணம். இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு தான் முக்கிய இடத்தில் இருக்கு.
உயர்கல்வி சேருகிற மாணவர்களின் சராசரியில் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. 50 முன்னணி உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்ட முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவிலேயே சிறந்த பாடத்திட்டத்தைக் கொண்டது நம் தமிழ்நாட்டுக் கல்விமுறை தான். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்ற பகுத்தறிவோட கேள்வி கேட்க சொல்லித்தர்ற தமிழ்நாட்டு கல்விமுறை, இன்னைக்கு சில பேரோட கண்களை உறுத்துகிறது. அதைப்பற்றி நமக்கு கவலை இல்ல. நம் மாணவர்களின் முன்னேற்றம் தான் முக்கியம் என்று திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அரசுப்பள்ளியில படிச்சு வெளிநாட்டுக்கு உயர்கல்வி படிக்கப் போற மாணவர்களுக்கோ முதல்பயணச் செலவு, முதல் ஆண்டுக்கான முழுச்செலவையும் அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்” எனப் பேசினார்.
இவ்விழாவில் அமைச்சர்கள் வி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் அவர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் திவ்யதர்சினி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், தங்க தமிழ்ச்செல்வன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.