இது வெறும் கனவாக மட்டும் இருக்கக் கூடாது என, விமானம் தயாரிக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை நிறைவேற்றிய காரைக்குடி இளம் விஞ்ஞானிக்கு பாராட்டு மழை பொழிகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் எபினேசர். இவர், தன்னுடைய சிறு வயது முதலே, விமானம் தயாரிக்கும் விஞ்ஞானி ஆக வேண்டும் என ஆர்வமாக இருந்துள்ளார். அதை நனவாக்கும் விதமாக, கண்டனூர் சிட்டாலாட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்து பிறகு அமெரிக்கா சென்று அங்கு ஏரோநாட்டிக்கல் படித்துள்ளார்.
அதன்பிறகு, தன்னுடைய கனவு திட்டமான விமானம் தயாரிக்கும் பணியில் ஆர்வமாக இறங்கி உள்ளார். அதற்காக, விமானம் தயாரிக்க தேவையான மெட்டீரியல் பொருட்களை வாங்குவதற்காக, அமெரிக்காவில் ஏரோநாட்டிக்கல் துறை சார்ந்தவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மேலும், அமெரிக்காவில் இசை ஆசிரியராக பணிபுரிந்த எபினேசர், அதில் கிடைத்த வருமானத்தை வைத்துக்கொண்டு, கடும் முயற்சியால் அவரது சொந்தக் காலில் நின்று தற்போது விமானத்தை தயாரித்து சாதனை படைத்து வெற்றி பெற்றுள்ளார். அதுவும் ஒன்றல்ல, ரெண்டல்ல மூன்று குட்டி விமானங்களை தயாரித்துள்ளார்.
இதுகுறித்து சாதனையாளர் எபினேசர் கூறும்போது, "தனக்கு அரசு அனுமதி கொடுத்தால் இந்த விமானத்தை பயன்படுத்த NCC, போலிஸ், கடலோரப் பாதுகாப்பு படை, வனத்துறை உள்ளிட்ட அனைவருக்கும் பயிற்சி அளிக்க தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தில் கதாநாயகன் சூர்யா, விமான நிறுவனம் தொடங்க ஆசைப்பட்டு பல தோல்விகளை சந்தித்து இறுதியில் தனது லட்சியத்தில் சாதிப்பார். ‘உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது’ என்ற பழையச் சொல்லாடலை மாற்றும் வகையில் சூர்யா இறுதியில் ஜெயித்ததை ‘பருந்தானது ஊர்க்குருவி’ எனச் சொல்லியிருப்பார்கள். அதேபோன்று தமிழக இளம் விஞ்ஞானி எபினேசரின் செயல் ஊர்க்குருவியும் பருந்தாகியிருக்கிறது என்பதை நிரூபிப்பதாக உள்ளது.