Skip to main content

“ஏற்றுமதி வளர்ச்சிக்கான தயார்நிலைக் குறியீட்டில் தமிழகம் முதலிடம்” - முதல்வர்  மு.க. ஸ்டாலின்

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

Tamil Nadu tops the export development readiness index CM Stalin

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று முகாம் அலுவலகத்தில், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் பேராசிரியர் எஸ்தர் டஃப்லோ, பேராசிரியர் ரகுராம் ராஜன், டாக்டர். அரவிந்த் சுப்ரமணியன், பேராசிரியர் ழான் த்ரேஸ், டாக்டர். எஸ்.நாராயண் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், அந்த வளர்ச்சி அனைவருக்கும் பயனளிப்பதாக இருப்பதை உறுதிசெய்வதிலும் கண்ணும் கருத்துமாக கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான ஒவ்வொரு திட்டத்தையும் வடிவமைப்பதில் இருந்து அதனைச் செயல்படுத்தும் வரை பல்வேறு துறை வல்லுநர்களிடம் கருத்துகளைக் கேட்பதோடு மட்டுமன்றி, தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கேட்டறிந்து செயல்பட்டு வருகிறது.

 

இந்தக் குழுவின் கடந்த கூட்டங்களின் போது, தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையை மேம்படுத்தி, இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான பல உத்திகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள். இதன் அடிப்படையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் உற்பத்தித் துறையில் தமிழ்நாடு ஏற்றுமதிக் கொள்கை, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு சரக்குப் போக்குவரத்துக் கொள்கை, தமிழ்நாடு மின் வாகனங்கள் கொள்கை போன்ற பல்வேறு துறைகளுக்கான தனித்தனிக் கொள்கைகளை வகுத்து அறிவித்துள்ளோம். குறிப்பாகப் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளைத் தரக்கூடிய தோல் அல்லாத காலணி உற்பத்தியிலும், எதிர்கால வளர்ச்சித் துறையான மின் வாகன உற்பத்தியிலும் நாட்டிலேயே அதிக முதலீடுகளைப் பெற்றுள்ளோம்.

 

Tamil Nadu tops the export development readiness index CM Stalin

 

மொத்தமாக, உற்பத்தித் துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிட்சுபிஷி, பெகட்ரான், ஓலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 241 முதலீட்டுக் கருத்துருக்கள் மூலம், 2 இலட்சத்து 97 ஆயிரத்து 196 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். 2020 - 21 ஆம் ஆண்டில் மின்னணுவியல் பொருட்கள் உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை, கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் இடத்திற்கு உயர்த்தியுள்ளோம். இத்தகைய பல்வேறு முயற்சிகளால், நாட்டிலுள்ள மாநிலங்களிலேயே ஏற்றுமதி வளர்ச்சிக்கான தயார்நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. இவ்வாறு உற்பத்தித் துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னிறுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

 

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்துள்ள நமது அரசு, பெண் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்று உயர்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு 'புதுமைப் பெண்' திட்டத்தின் மூலம் மாதம் 1,000 ரூபாய் வழங்கி வருகிறோம். இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Tamil Nadu tops the export development readiness index CM Stalin

 

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பெண்கள் தடையின்றி உயர்கல்வி பெற இந்தத் திட்டம் வழிவகுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இந்தத் திட்டத்தில் தற்போது 1,978 பள்ளிகளில் பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்தத் திட்டத்தினால் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளதோடு, இடைநிற்றலும் குறைந்துள்ளது என மாநிலத் திட்டக்குழுவின் ஆய்வு கூறுகிறது. இந்தியாவிற்கே முன்மாதிரியான இந்தத் திட்டத்தை, 404 கோடி ரூபாய் செலவில், 31 ஆயிரத்து 8 பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 53 ஆயிரத்து 798 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விரிவுபடுத்திட எண்ணியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்