கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும், மாற்று அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜகவை கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டனப் பொதுக்கூட்டம் அறிவித்துள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், 'பல்வேறு மாநிலங்களில் விசாரணை அமைப்புகளின் மூலமாக பாஜக பழிவாங்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுகிறது. எல்லா மாநிலங்களிலும் சுற்றிய பழிவாங்கும் படலம் தமிழ்நாட்டுக்கும் வந்து விட்டது. தமிழ்நாடு என்பது பாஜகவை பின்னங்கால் பிடரியில் அடிக்க விரட்டும் மாநிலம். அமித்ஷா சென்னை வந்து சென்ற நோக்கமும், அவரது பிரச்சார பொதுக்கூட்டம் படுதோல்வியில் முடிந்ததை மறைக்கவே செந்தில் பாலாஜி கைது நிகழ்த்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்தவருக்கே இந்த அளவுக்கு தொல்லையையும் நெருக்கடியும் கொடுத்திருப்பது பழிவாங்குவதே தவிர விசாரணை அல்ல.
தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்துக்கு மத்திய பாதுகாப்புப் படை போலீசாரை அழைத்து வருவது மாநில ஆட்சியின் மாண்பு காக்கும் முறையா? அச்சமூட்டும் சூழ்நிலையை உருவாக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு சில வாரங்களுக்கு முன்பு எச்சரித்திருந்தது. இப்படி உச்சந் தலையில் உச்சநீதிமன்ற கொட்டிய பிறகும் அமலாக்கத்துறை திருந்துவதாகத் தெரியவில்லை. இதைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நாளை மறுநாள் கோவை சிவானந்தா காலனியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.