Skip to main content

'ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்'- தமிழிசை விமர்சனம்

Published on 25/11/2024 | Edited on 25/11/2024
mkstalin

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், ‘அதானி தமிழகத்திற்கு வந்து முதல்வரைச் சந்தித்ததாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்’ எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், “இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளார். ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை. அதனால் தினமும் அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார். அதற்கு எல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை” எனப் பதிலளித்திருந்தார்.இது பேசு பொருளானது.

தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது தொடர்பாக பேசுகையில், “ராமதாஸ் தனது அறிக்கையில் என்ன கேள்வி என்றால், ‘கௌதம் அதானி என் உங்கள் இல்லத்தில் எதற்காக ரகசியமாக சந்தித்தீர்கள் என்று கேள்வி கேட்டார். இதில் என்ன தவறு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பது எங்களுடைய உரிமை. பதவியில் இருப்பவர்கள் பதில் சொல்வது கடமை. அதை விட்டுவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், ராமதாசை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி உள்ளார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ராமதாஸ் இல்லை என்றால்  2006இல் கலைஞர் முதலமைச்சராக இருந்திருக்க முடியாது. மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா தொடர்ந்து விமர்சனம் செய்த நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கலைஞருக்கு முழு ஆதரவு கொடுத்தார். அதனால் தான் ஐந்தாண்டுகள் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். மு.க. ஸ்டாலினைத் துணை முதல்வராக்கினார்.

pmk

ராமதாஸ் இல்லை என்றால் கலைஞரை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்திருக்க மாட்டார்கள். மணிமண்டபம் வந்திருக்காது. நாங்கள் பதிவு செய்த வழக்கை ராமதாஸால் தான் திரும்பப் பெற்றோம். அதனால்தான் நீதிபதி கலைஞரை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யலாம் என்று தீர்ப்பு கொடுத்தார். ராமதாஸ், ஆறு இட ஒதுக்கீடுகளைப் பெற்றுத் தந்த சமூக சீர்திருத்தவாதி. கலைஞரிடம் ஸ்டாலின் எந்த படமும் கற்றுக் கொள்ளவில்லை. அறிக்கை என்பது எங்களுடைய யோசனைகள். அறிக்கை விடுவது எங்களுடைய கடமை.  எங்களுடைய உரிமை. அதனால் அறிக்கை விடுகிறோம்.தமிழ்நாடு மக்கள் நலம் பெற வேண்டும். வளர்ச்சி பெற வேண்டும் என்ற காரணத்தால் தான் அறிக்கை விடுகின்றோம். அந்த நல்ல யோசனைகளைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார்.

இந்நிலையில் முதல்வரின் இந்த கருத்துக்கு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த எக்ஸ் பதிவில் , 'மரியாதைக்குரிய முதலமைச்சர் அவர்களே மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம் மக்களுக்காக கருத்து சொன்னால் அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது  சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல்  வேலையில்லாமல்  இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா... ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்... அதுவும் பாமக தலைவர் பெரியவர்.

Tamilisai soundararajan

அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்வதாக எடுத்துக் கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை..  மக்களுக்காக இதை சொல்கிறேனே தவிர எனக்கும் வேலை வேலையில்லாமல் இதை சொல்லவில்லை.. தமிழகத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் மற்ற மாநிலங்களில் எனக்கு இருந்த வேலையை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறேன்... 2026 யாருக்கு வேலை இருக்கப் போகிறது யாருக்கு வேலை இல்லாமல் போகப் போகிறது என்பதை உணர்த்தும்... யாருக்கும் நிரந்தரமாக வேலை இருக்கப் போவதில்லை யாரும் நிரந்தரமாக வேலை இல்லாமல் இருக்கப் போவதில்லை...' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்