6 வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் - 2023 கடந்த ஜனவரி 19 ஆம் தேதி பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இந்த் விழாவானது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். 13 நாட்களாக தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 நேற்று (31.01.2024) நிறைவடைந்தது.
இதனையடுத்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (31.01.2024) நடைபெற்ற நிறைவு நாள் விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் முன்னிலையில் ஒட்டுமொத்த தொடரில் முதலிடம் பிடித்த மகாராஷ்டிரா, இரண்டாமிடம் பிடித்த தமிழ்நாடு மற்றும் மூன்றாம் இடம் பிடித்த ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினர்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சமீபத்திய கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் மூலம், தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராகவும், உலகளாவிய விளையாட்டு மையமாகவும் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு சார்பில் 38 தங்கம், 21 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என மொத்தம் 98 பதக்கங்களுடன், இரண்டாம் இடத்தைப் பிடித்து வரலாறு படைத்துள்ளது. போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத் துறையைச் சார்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.