டெல்லியில் இன்று (01/10/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அதேபோல், நீர் நிலைகளைப் பாதுகாக்க அம்ருத் 2.0 திட்டமும் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலம் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தமிழ்நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் நகர்ப்புற பகுதிகளை வாழ்வதற்கு உகந்ததாக மாற்றும் முயற்சியில் தமிழ்நாடு துணை நிற்கும். தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை மேம்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து நகர்ப்புற பகுதிகளையும் மேம்படுத்துவதற்கு மாநில அரசின் முன்னோடி திட்டங்களை உருவாக்க உள்ளோம். நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது " எனத் தெரிவித்தார்.