Skip to main content

வெளிநாடுகளில் தவிக்கும் அத்தனை தமிழர்களையும் மீட்டு வருவோம்! -மத்திய அரசு உத்தரவாதம்!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020
chennai high court

 

 

கரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் அத்தனை பேரையும், தாயகம் மீட்டுவருவதில் தீர்க்கமாக இருப்பதாக, மத்திய அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

 

கரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஏதுவாக,  தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, திமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு கடந்த முறை  விசாரணைக்கு வந்தபோது, வெளிநாடுகளில் சிக்கியுள்ள 25,939 தமிழர்களைத் தாயகம் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

 

இந்த நிலையில், இந்த வழக்கு  நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

 

அதில், கரோனா  காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் அத்தனை தமிழர்களையும் தாயகம் மீட்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்,வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்டு வர,  ஜூன் 6- ம் தேதி முதல் ஜூலை 20 -ம் தேதி வரை, 101 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.  கடந்த  20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ம் தேதி வரை, 58 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இந்த வழக்கு தொடர்ந்த பின், மொத்தமாக  286 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

 

மேலும், ஆகஸ்ட் 5- ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, இந்தியாவுக்கு இயக்கவுள்ள 792 விமானங்களில், தமிழகத்துக்கு 127 விமானங்கள் இயக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசின் விளக்கத்தை பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, குறிப்பிட்ட கால அட்டவணையில் விமானங்கள் இயக்கப்படுவதை  உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தினர். மத்திய அரசு ஒருவேளை, நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள விவரங்களின்படி விமானங்களை இயக்க தவறும் பட்சத்தில், இதே விவகாரத்தில்  நீதிமன்றத்தை மீண்டும்  அணுக திமுகவிற்கு அனுமதியளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.