தேக்கடியில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற தமிழக பத்திரிக்கையாளர்களுக்கு கேரளா வனத்துறை செக்போஸ்டில் தடுத்து நிறுத்தி அனுமதி மறுக்கப்பட்டது. கேரளாவில் ஓணம் பண்டிகை நேற்றுமுன் தினம்; கொண்டாப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று தேக்கடியில் படகு சவாரி செய்வதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதுகுறித்து செய்தி சேகரிக்க தமிழக பத்திரிக்கையாளர்கள் தேக்கடிக்கு டூவீலரில் சென்றபோது தேக்கடி ரோட்டில் உள்ள கேரளா வனத்துறை செக் போஸ்டில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். தமிழக பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க தேக்கடியில் அனுமதியில்லை எனக்கூறி திருப்பி அனுப்பினர். கடந்த ஓராண்டாக வாகன பதிவு எண்ணை குறித்து வைத்து அனுமதித்த நிலையில், திடீரென அனுமதி மறுக்கபபட்டது.
இதனால் பெரியாறு அணைப்பகுதிக்கு மத்திய துணைக்குழு மூவர் குழு ஆய்வுக்குச் செல்லும்போது செய்தி சேகரிக்க தமிழக பத்திரிக்கையாளர்கள் செல்வதிலும் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர், தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தேக்கடி ஷட்டர் மற்றும் ஆய்வாளர் குடியிருப்புக்கு செல்வதற்கு முன்பாகவே அமைந்துள்ள கேரளா வனத்துறை சோதனைச் சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தேனி மாவட்ட நிர்வாகம், இந்த விவகாரத்தில் உடனடியக தலையிட்டு தீர்வு காண முன் வர வேண்டும். இல்லாவிட்டால் விவசாய சங்கம் சார்பில் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்றனர்.