அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த வீடியோ பதிவு ஒன்றில், “தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்த போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்றுவிடப் போவதில்லை. தமிழ்நாட்டில் கடைசித் துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். பெற்றோர்களே, இந்த ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது. நம் பிள்ளைகளை நாம் தான் பார்த்துக் கொள்ளவேண்டும். கவனமாக இருங்கள். மாணவச் செல்வங்களே, இளைய சமுதாயமே, உங்கள் எதிர்காலம் மிக முக்கியம். ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளைப் பெற்றுத் தந்துவிடும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதே சமயம் ஒருநாள் பயணமாக கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க.வின் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “ தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவுடன் போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது. இந்த செயல் என் மனதை வலிக்கச் செய்கிறது. பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைப்பவர்களிடம் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் பா.ஜ.க.வை பலப்படுத்தினால் தமிழக எதிரிகள் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும். இது மோடி தரும் உத்தரவாதம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் நாகர்கோவிலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று முன்தினம் (05.03.2024) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழக ஆளுநரின் அனுமதியோடு குட்கா வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்க்கப்பட்டுள்ளார். பா.ஜ.க.வை பொறுத்தவரையில் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய 16 பேரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று பா.ஜ.க. தனது கட்சியில் சேர்த்துள்ளது. நீண்ட கடற்கரை கொண்ட பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தான் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்பது நாடறிந்த ஒன்று. தமிழ்நாட்டில் அமைதியான ஆட்சி, நிலையான ஆட்சி நடைபெறுகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. இங்கு யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. இந்தியா முழுவதும் போதைப் பொருள் புழக்கம் உள்ள நிலையில் தமிழகம் மீது மட்டும் பழி சுமத்துவது எதற்கு? இதற்கு பெயர் மோடி பார்முலாவா என்று கேட்க விரும்புகிறோம். ஆந்திரா, தெலங்கானா, ஒரிசா, வடகிழக்கு மாநிலங்களில் கஞ்சா பயிரிடப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க. அரசு தமிழகம் மீது பழி போட வேண்டாம். தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. இதனைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” எனப் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் பேசுகையில், “போதைப் பொருள் விற்பனை செய்தவர்களின் 18 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளோம். சுமார் 2 லட்சம் பேர் போதைப் பொருள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுள்ளனர். அனைத்து கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளோம்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பேசுகையில், “போதைப்பொருள்களை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த இந்திய அளவில் போதைப்பொருள் ஒழிப்பில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.