சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 22 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூடியது. இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, துறை செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தெரிவிக்கையில், “தமிழகத்தில் சுமார் 30 லட்சம் பேர் சமூக நலப் பாதுகாப்பு திட்டங்கள் மூலமாக பயனடைகின்றனர். கைம்பெண் உதவித்தொகை, ஆதரவற்ற முதியோருக்கான மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 30 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவார்கள். உதவித் தொகைகளுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கக் கூடியவர்களுக்கும் விரைவில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கைம்பெண், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு 845 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். ” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் 100 வயது நிறைவு செய்துள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களை கௌரவிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டக் கருவூலம் மூலமாக கடந்த1972 ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி முதல் ஓய்வூதியம் பெற்று வரும் கு.கோபாலகிருஷ்ணன் என்பவர் தற்போது 107 வயதை நிறைவு செய்துள்ளார். இவர் தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெறுபவர்களில் வயதில் மூத்தவர் ஆவார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரு வாரிசுகள் உள்ளனர்.
இவர் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தில் ஐஇஎம்ஈ (I.E.M.E) படை பிரிவில் சேர்ந்து மோட்டார் மெக்கானிக் மற்றும் கனரக வாகன ஓட்டுநராக லாண்ஸ் நாயக் பதவியில் ஐந்து வருடங்கள் பணிபுரிந்துள்ளார். அப்போது பர்மா, மணிப்பூர் போன்ற இடங்களில் நடைபெற்ற போரில் பங்கெடுத்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் ஐந்து பதக்கங்களையும் பெற்றுள்ளார். அதன் பிறகு மத்திய அரசுப்பணியில் சில காலம் சுங்கத்துறையில் பணியாற்றி உள்ளார். அதன் பிறகு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்து நாகப்பட்டினம், காவல் நிலையம் திட்டச்சேரியில் காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் இவரை கௌரவிக்கும் விதமாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கருவூல கணக்குத்துறை ஆணையர் க.விஜயேந்திர பாண்டியனும், கு.கோபாலகிருஷ்ணன் வசித்து வரும் வீட்டிற்கு நேரில் சென்று ஓய்வூதியர்களுக்கான ஆண்டு நேர்காணலை மேற்கொண்டதுடன் நேர்காணல் சான்றிதழை அளித்து கௌரவித்தார்கள். இந்நிகழ்வில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் தமிழகம் முழுவதும் 100 வயது நிறைவு செய்துள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களை கௌரவிக்கும் விதமாக அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்களும் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்குச் சென்று ஆண்டு நேர்காணல் செய்து கௌரவிக்க கருவூல கணக்குத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.