தமிழகத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு 'நம்பிக்கை' என்ற கரத்தை வலுப்படுத்தி வருகிறது திமுக அரசு. பத்திரிகையாளர் நல வாரியம், ஓய்வூதியம், குடும்ப நல நிதி, அரசு அங்கீகார அடையாள அட்டை எனப் பலராலும் பாராட்டக்கூடிய தொடர் செயல்பாடுகளை செய்தித்துறை நிர்வாகமும், அதன் அமைச்சருமான மு.பெ.சாமிநாதனும் செய்து வருகின்றனர்.
நக்கீரன் இதழ் தொடங்கப்பட்ட காலத்தில், நிறுவனத்தில் செய்தி ஆசிரியராகக் குறிப்பாக நக்கீரன் எடிட்டராக பணியமர்த்தப்பட்டவர் தான் துரை என்கிற வெள்ளத்துரை. இவர், உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஆண்டு உயிரிழந்தார். அவருக்குத் தமிழக அரசின் பத்திரிகையாளர் குடும்ப நல நிதி வேண்டி நக்கீரன் ஆசிரியர் அவர்களின் ஏற்பாட்டின் படி அவரது துணைவியார் செய்தித் துறை அமைச்சகத்தில் விண்ணப்பம் கொடுத்தார். பத்திரிகை நிறுவனத்தில் பணி புரிந்ததற்கான சான்றிதழ்களை ஆசிரியர் மறைந்த துரையின் குடும்பத்தினருக்கும் செய்தித் துறைக்கும் வழங்கியதோடு, பத்திரிகையாளர் குடும்ப நிதி துரை குடும்பத்திற்குக் கிடைப்பதற்குத் தொடர்ந்து பல்வேறு உதவிகள் செய்தார்.
அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் உத்தரவால், செய்தித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பால் சென்ற 16 ஆம் தேதி மறைந்த பத்திரிகையாளர் துரையின் துணைவியார் பானுமதியிடம் தமிழக அரசின் பத்திரிக்கையாளர் குடும்ப நல நிதி ரூ.5 லட்சம் காசோலையாக வழங்கப்பட்டது. மறைந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு அரசின் நிவாரணம் கிடைக்க முழு ஒத்துழைப்பு வழங்கிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கும், பத்திரிகையாளர்களுக்கு நம்பிக்கை தோழனாக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நக்கீரன் நன்றி தெரிவிக்கிறது.