Skip to main content

தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி எதிர்ப்பு

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Tamil Nadu Governor RN Ravi's opposition to the decision

 

தமிழக அரசின் சார்பில் உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் தற்போது துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதே சமயம் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் சார்பில் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பிலிருந்து ஒருவர் என 3 பேர் ஆளுநர் சார்பில் அமைக்கப்படும் தேடுதல் குழுவில் இடம்பெறுவர். இக்குழுவினர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரை செய்வர். அதில் ஒருவரை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆளுநர் நியமிப்பது வழக்கம்.

 

இந்த சூழலில் கடந்த 6 ஆம் தேதி, இந்த 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களைத் தேர்வு செய்வதற்கு 4 பேர் அடங்கிய தனித்தனிக் குழுக்களை அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டிருந்தார். அந்தக் குழுக்களில் முதன்முறையாகப் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். அதிலும் குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழகத்துக்கான தேடுதல் குழுவில், தமிழக ஆளுநரின் பிரதிநிதியாக, கர்நாடக மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் பட்டு சத்யநாராயணா என்பவரும், தமிழக அரசின் பிரதிநிதியாக மாநிலத் திட்டக் குழுவின் உறுப்பினர் கே. தீனபந்துவும், பல்கலைக்கழக செனட் பிரதிநிதியாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி. ஜெகதீசனும், பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியாக, தெற்கு பிஹார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஹெச்சிஎஸ் ரத்தோரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

 

இதனையடுத்து சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அந்தக் குழுவில், தமிழக ஆளுநரின் பிரதிநிதியாக பட்டு சத்யநாராயணாவும், தமிழக அரசின் பிரதிநிதியாக கே. தீனபந்துவும், பல்கலைக்கழக செனட் பிரதிநிதியாக பி.ஜெகதீசன் என 3 பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். அதே சமயம் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்த ஹெச்சிஎஸ் ரத்தோர் தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

 

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கத் தேர்வுக் குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்ததற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதலின்றி அமைக்கத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் சார்பில் தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பாணையைத் திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்