சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில், ‘ஜி 20 இந்திய தலைமைத்துவத்தின் தீர்மானமும், உலக நாடுகளின் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று (15-11-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினார்.
அப்போது அவர், “உலக நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கும். ஏழ்மையான நாடுகள், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வளர வேண்டும் என்பதே நீடித்த வளர்ச்சி. உலக பொருளாதாரத்தில் சீனா வேகமாக வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது. இது வளரும் நாடுகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். சீனா, தங்களை சுற்றியுள்ள ஏழ்மை நாடுகளுக்கு கடன்களை வழங்கி தன் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்கிறது.
இலங்கையில் உள்கட்ட வளர்ச்சிக்காக சீனா சுமார் 1 பில்லியன் அளவுக்கு கடன் வழங்கியுள்ளது. இந்த தொகையை இலங்கை திரும்ப செலுத்த முடியாத பட்சத்தில், சீனாவிடம் சரணடைய வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், இந்தியாவின் வளர்ச்சி, உலகில் உள்ள ஏழ்மை நாடுகளின் வளர்ச்சியாக இருக்கும். திரிபுரா முதல் தமிழ்நாடு வரை அனைவருக்கும் மத்திய அரசின் எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டினுடைய எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உலகிற்கு ஒரு மாடலாக இருக்கிறது. இது உலக நாடுகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்” என்று கூறினார்.