தமிழக அரசியல் நிலவரம் குறித்து கவர்னர் நடுநிலையோடு முடிவெடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசியல் சூழல் குறித்து கவர்னர் நடுநிலையோடு முடிவெடுக்க வேண்டுமென, சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் நேற்று வந்த ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை சென்றுள்ளார். இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு, சிறிய நாடான இலங்கை அதன் உண்மை நிலைப்பாடுகளை அறிந்து பணிந்து செயல்பட வேண்டும். மீனவர்கள் பிரச்னை தொடர்கதையாக உள்ளது. மீனவர்களை ஒருபுறம் விடுவித்தால், மறுபுறம் அவர்களை கைது செய்கின்றனர்.
பிரதமர் மோடி இலங்கை சென்று வந்தபிறகும் மீனவர்கள் பிரச்னை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரம் வரும் காலங்களில் அச்சமின்றி இருக்க, ஒரு நிலையான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். தமிழக அரசியல் சூழலை பொறுத்தவரை ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு பிரிவினரும், எதிர் கட்சிகளை சேர்ந்தவர்களும் கவர்னரை சந்தித்து அவர்களுக்கு தெரிந்த உண்மையை விளக்கி கூறியிருக்கின்றனர். கடிதம் மூலமும் சமர்ப்பித்துள்ளனர். கவர்னருக்கு மட்டுமே யார் எந்த கருத்துகளை கூறியிருக்கின்றனர் என்று தெரியும். அவர் தமிழக அரசியல் குறித்து, உண்மை நிலையை நடுநிலையோடு செயல்பட்டு அதிகாரப்பூர்வமான தகவல்களை மக்களுக்கு கொடுப்பார் என்று நம்புகிறேன். அவர் நடுநிலையோடு, ஜனநாயகரீதியாக முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.