திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது, “ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுமென்றே தமிழக அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். நாம் அனுப்பும் மசோதாக்களுக்கு கையெழுத்து போடக் கூடாது என்ற முடிவில் இருக்கிறார் நாகலாந்திலே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா?. அவரை ஊரை விட்டே விரட்டியடித்தனர்.
நான் சொல்வதை தவறாக நினைக்கக் கூடாது. நாகலாந்து மக்கள் நாய் கறி உண்பார்கள். நாய் கறி சாப்பிடுபவர்களே, இவ்வளவு சொரணை இருந்து இந்த ஆளுநரை விரட்டியடித்தார்கள். அப்படி என்றால், உப்பு போட்டு சோறு சாப்பிடும் தமிழர்களுக்கு எந்தளவுக்கு சொரணை இருக்கும் என்பதை ஆளுநர் எண்ணி பார்க்க வேண்டும்” என்று பேசினார்.
ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாகாக்கள் (நாகலாந்து மக்கள்) துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுப்படுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என்று ஆர்.எஸ்.பாரதியை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.