திருச்சி மாவட்டம், கருமண்டபம் கல்யாணசுந்தரம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் நேற்று முன்தினம் (26.08.2021) தன்னுடைய வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் மன்னார்குடியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்வுக்குச் சென்றுள்ளார். திருமண நிகழ்வு முடிந்து நேற்று மாலை பாண்டியன், அவரது மருமகள் நந்தினி தேவி இருவரும் வீடு திரும்பியுள்ளனர். பாண்டியனின் மனைவியும் மகனும் மன்னார்குடியிலேயே இருந்துள்ளனர். வீடு திரும்பிய பாண்டியன், தனது வீட்டின் முன்பக்கக் கதவை சாவி போட்டு திறக்க முயன்றுள்ளார். ஆனால், கதவைத் திறக்க முடியவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவர், வீட்டின் பின்னால் சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறிக் கிடந்தன. அதனைத் தொடர்ந்து பாண்டியன், திருச்சி நீதிமன்ற காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அத்தகவலைத் தொடர்ந்து நீதிமன்ற காவல் நிலைய காவலர்கள், பாண்டியன் வீட்டிற்கு வந்து சோதனை செய்துள்ளனர். மேலும், பாண்டியனிடம் வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் குறித்த தகவல்களைக் கேட்டுள்ளனர். அப்போது, பாண்டியன், தனது விட்டில் 50 பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீஸார் 50 பவுன் நகை மற்றும் ரூ. 25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தங்களது புகாரில் குறிப்பிட்டுக்கொண்டனர்.
இதற்கிடையில் பாண்டியனின் மனைவி பத்மாவதி, மகன் ஜெய ராஜேஷ் இருவரும் மன்னார்குடியில் இருந்து வீடு திரும்பினார்கள். வீடு திரும்பிய பத்மாவதி, நடந்த நிகழ்வுகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின் வீட்டிற்குள் சென்ற சோதனையிட்ட பத்மாவதி, நகைகள் திருடு போகவில்லை என்றும் துணியில் சுற்றி பத்திரமாக இருப்பதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் பத்மாவதியிடம் விசாரித்தனர். அப்போது அவர், வெளியூர் சென்றதால் நகைகளைப் பாதுகாப்பாக துணியில் சுற்றி மறைத்து வைத்திருந்ததாகவும், அதனால் நகைகள் தப்பியதாகவும் கூறினார். ஆனால், மேஜையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சவரன் நகை மட்டும் திருடு போனதாக தெரிவித்துள்ளார். அதன் பின் இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ரோடு அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.