Skip to main content

நியூட்ரினோ திட்டத்துக்கான அனுமதியை எதிர்த்து தேசிய சுற்றுச்சூழல் ஆணையத்தில் தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் : ஸ்டாலின்

Published on 27/03/2018 | Edited on 27/03/2018
nutrino1

 

நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் அளித்துள்ள அனுமதியை எதிர்த்து தேசிய சுற்றுச்சூழல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்வதோடு - உரிய உத்தரவைப் பெறும்வரை திட்டத்தைச் செயல்படுத்துவதை தடைசெய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்த அவரது அறிக்கை:

’’தொடக்கத்திலிருந்தே வெளிப்படுத்தப்படும் தமிழக மக்களின் எதிர்ப்பையும், பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களையும் துச்சமென மதித்து, தூரத்தில் தூக்கியெறிந்து விட்டு, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்திட மத்திய பா.ஜ.க. அரசு அராஜகமாக அனுமதியளித்து இருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


 
மக்களிடம் கருத்து கேட்காமல், சுற்றுப்புறச்சூழல் சட்டங்களுக்கு எதிராக, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், நிலத்தடி நீர் ஆதாரத்தையும் பாதிப்பது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய, பாதுகாப்பற்ற ஒரு திட்டத்திற்கு, மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்திருப்பதும், முல்லை பெரியாறு அணையிலிருந்து விவசாயிகளுக்கும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன்படும் தண்ணீரை, இந்தத் திட்டத்திற்காக எடுத்துக் கொள்ள அனுமதித்து இருப்பதையும், சர்வாதிகாரத்தின் உச்சகட்டமாகவே கருதுகிறேன்.


 
மக்களின் நலனை பாதிக்கும், குறிப்பாக தேனி மாவட்ட மக்களை பேரிடர் அபாயத்துக்கு உள்ளாக்கும் இந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கும் முன்பு, மாநிலத்தில் உள்ள அரசை மத்திய அரசு கலந்து ஆலோசித்ததா? மாநில அதிமுக அரசு இத்திட்டத்தின் பொருட்டு மத்திய அரசுக்கு அளித்த கருத்துகள் என்ன? அப்படி கலந்து ஆலோசிக்கவில்லை என்றால், அதிமுக அரசு வழக்கம் போல தமிழ்நாட்டு நலனை காலடியில் போட்டு மிதித்துக் கொண்டு, வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்? முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களும், துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், இதற்குத் தமிழக மக்களிடம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.


 
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள பொட்டியபுரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் 1,500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் இந்த நியூட்ரினோ ஆய்வுக்கூடத்துக்கு, தமிழ்நாடு அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெற வேண்டுமென்று, இப்போது மத்திய சுற்றுப்புறச்சூழல் குழு அனுமதியில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. முக்கியமாக, ‘குறிப்பிட்ட நிபந்தனை’ (Specific Condition) என்றே கூறியிருக்கிறது. இதே அனுமதியில், “மலையைத் தகர்க்கும் பணிகளில் ஆபத்து ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்”, என்றும்  நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுப்புறச் சூழல் அனுமதியை எதிர்த்து, 30 நாட்களுக்குள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


 
“தகர்க்கும்போது ஏற்படும் ஆபத்துகள்”, என்று சுற்றுப்புறச்சூழல் அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இத்திட்டம் மக்களுக்கும், மலைகளில் வாழும் உயிரினங்கள், அபூர்வமான தாவரங்கள் அனைத்திற்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதை மத்திய சுற்றுப்புறச்சூழல் குழுவே எதிர்பார்க்கிறது. ஆகவே, இத்திட்டத்துக்கு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது. அதை முதலமைச்சர் முன்கூட்டியே உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அதிமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.


 
எந்தவொரு திட்டமும் மக்களுக்கு பாதுகாப்பானதா என்பதுதான் முதல் கேள்வி. “வளர்ச்சி” என்ற ஒற்றைப்புள்ளியை ’மாய மான்’ போலக்காட்டி, மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்துக்கும் வேட்டு வைக்கும், நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. இதனை அதிமுக அரசும் தட்டிக்கேட்காமல் இருப்பது சிறிதும் சகித்துக் கொள்ள முடியாத, பொறுப்பற்ற செயலாகவே அமைந்திருக்கிறது.


 
ஆகவே, மத்திய பாஜக அரசு நியூட்ரினோ திட்டத்துக்கு அளித்திருக்கின்ற சுற்றுப்புறச்சூழல் அனுமதியை எதிர்த்து, அதிமுக அரசு தேசிய சுற்றுச்சூழல் ஆணையத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், அதில் உரிய உத்தரவைப் பெறும்வரை திட்டத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கையைத் தடைசெய்ய வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

கஞ்சா கடத்தலுக்கு துணைபோன தனிப்படை; அதிரடி காட்டிய காவல் ஆணையர்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Trichy Commissioner who replaced the special force that was involved smuggling of cannabis

தமிழ்நாடு முழுவதும் குற்ற சம்பவங்களை முன் கூட்டியே அறிந்து தடுப்பதற்காகவும், போதை பொருள் விற்பனை, கடத்தல், உள்ளிட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்கு என்று அந்தந்த மாவட்டங்களிலும், மாநகரங்களிலும், காவல்நிலையங்களை தாண்டி, அதிகாரிகள் தங்களுக்கென்று ஒரு தனிப்படையை உருவாக்குவார்கள். அதில் சிறப்பாக பணியாற்றும் காவலர்கள் யார் என்பதை அறிந்து அவர்களைத் தேர்வு செய்து, மாநகரிலும், மாவட்டத்திலும் குற்றங்களை தடுக்கும் விதமாக இந்த தனிப்படை செயல்படும்.

அதேபோல் தான் திருச்சி மாநகரில் அதிகரித்து வரும் குட்கா, கஞ்சா, போதை வஸ்துகள், லாட்டரி உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், அதில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும் 5 பேர் கொண்ட ஒரு தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. அதில் திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய குமார் தலைமையில் தலைமைக் காவலர்கள் சங்கராந்தி, ராஜேஸ்குமார், குமார், தங்கராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்கள் மாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை உள்ளிட்டவற்றை தடுக்காமல், குட்காவை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வரும் பெரிய முதலாளிகளுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர். அதேபோல் கஞ்சா விற்பனைக்கும் அவர்கள் துணையாக இருந்ததோடு, வெளிநாடுகளுக்கு சென்று அங்கிருந்து குருவியாக தங்கம் கடத்தி வரும் கும்பல்களோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதோடு, அவர்களிடம் இருந்து கடத்தி வரும் தங்கத்தை அடித்து பிடிங்கும் பணியிலும் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழகத்தின் முன்னாள் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு 2.0, 3.0 என்ற திட்டத்தின்கீழ் குட்கா, கஞ்சா போன்றவை தமிழ்நாட்டிற்குள் வருவதை தடுக்க பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதே சமயம் தமிழகம் வழியாக கடத்தப்பட்ட பல்லாயிரம் கிலோ கஞ்சா, குட்கா போன்றவை கடத்தி செல்லும் போதே பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் பெரிய அளவில் குட்காவை மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரும் பெரிய முதலாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அதை கடத்தி கொண்டுவரும் நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த குட்கா, கஞ்சா கடத்தல் வழக்குகளில் பெரும்பாலும் காவல்துறையில் பணியாற்றும் தனிப்படையினர் தான் கடத்தல் முதலாளிகளுக்கு உளவாளிகளாக இருந்து வருகின்றனர். அப்படி பெரிய கடத்தல் முதலாளிகளுக்கு தான் இந்த 5 பேர் கொண்ட கும்பலும் உளவாளிகளாக இருந்துள்ளனர். 

இதனையறிந்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் 5 பேரையும் நேற்று திடீரென மாநகர ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மீது தொடர்ந்து பல குற்றசாட்டுகள் முன் வைக்கப்பட்டதையடுத்து அவர்களை் 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதே போல் குற்றச்சாட்டு உறையூர் காவல் ஆய்வாளர் ராஜா மீதும் எழுந்ததால், அவருக்கு ஆணையர் மெமோ கொடுத்து எச்சரித்து அனுப்பியுள்ளார். காவல் ஆணையரின் இந்த அதிரடி நடவடிக்கை காவலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இந்த தனிப்படையை இயக்கிய உதவி ஆணையர் ஜெயசீலன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், கீழ் உள்ள காவலர்களை பழிகடாவாக்கியுள்ளனர். உயர் அதிகாரிகளின் இதுபோன்ற சம்பவங்களில் எப்போதும் கீழ் நிலையில் உள்ள காவலர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். எனவே உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுப்பார்களா? என்று காவல்துறையினர் வட்டாரங்களில் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்ர்பாக நாம் திருச்சி காவல் ஆணையரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “உதவி ஆணையர் ஜெயசீலன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பிறகு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியாக தெரிவித்தார். 

Next Story

மதுரை எய்ம்ஸ்; சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்! 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Madurai AIIMS; Application for Environmental Permit 

மதுரை மாவட்டம் தோப்பூரில்  எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்காகத் தலைவர், செயல் இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சில குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து எந்த ஒரு பணிகளும் நடைபெறாத நிலையில், பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் விரைவில் கட்டுமான பணியைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போதைய திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு தமிழகத்திற்கு வெறும் ஒத்த செங்கல்லை மட்டும் நட்டு வைத்துவிட்டு எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என்று கூறியது. ஆனால் அங்கு சென்று பார்த்தால் இந்த ஒத்த செங்கல்தான் இருக்கிறது என்று ஒரு செங்கல்லை வைத்து பிரச்சாரம் செய்தார். இது அரசியல் களத்தில் பலரது கவனத்தையும் பெற்றது.

இந்நிலையில், மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 221 ஏக்கரில் உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவக் கல்லூரி, செவிலியர்கள் கல்லூரி, பணியாளர்கள் குடியிருப்பு, மாணவ மாணவியருக்கான விடுதிகள் அமைக்கப்பட உள்ளது.