
தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது.
அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ. 6.44 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டிற்கு கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி (27.01.2024) அரசு முறை பயணம் மேற்கொண்டார். ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். இதனையடுத்து பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதைக் கண்காணிக்க குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதைக் கண்காணிக்க 17 பேர் கொண்ட சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான இந்தக் குழுவில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை செயலர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.