தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு இன்று (10/01/2022) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வரும் ஜனவரி 14- ஆம் தேதி முதல் ஜனவரி 18- ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஜனவரி 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன்கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழ்நாட்டில் ஜனவரி 31- ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும்.
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசிச் செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.