தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (01/11/2021) கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று (01/11/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து எடுத்துரைத்து, உடனடியாக நிலுவைத் தொகையினை மாநிலத்திற்கு விடுவிக்கக் கோரி இந்திய பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (01/11/2021) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் அதிகபட்சம் 100 நாட்கள் உடலுழைப்பை வழங்கும் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், 2021 - 2022ஆம் நிதியாண்டில் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ரூபாய் 3,524.69 கோடியில் மொத்தத் தொகையும் 15/09/2021 வரை தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைத்து முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்து, அதன் பிறகு இத்திட்டத்திற்கு நிதி ஏதும் விடுவிக்காத காரணத்தால், 01/11/2021 அன்றுள்ளவாறு 1,178.12 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் வழங்கப்படாமல், நிலுவையாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.