Skip to main content

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Tamil Nadu Chief Minister MK Stalin wishes Bakrit

பக்ரீத் பண்டிகை நாளை(17.06.2024) கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம் சகோதரத்துவம் அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை 'ஈத்துவக்கும் இன்பம்' என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இசுலாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்தப் பக்ரீத் பெருநாள்! நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்ட அமைந்திருக்கின்றன. அறவழிக்கான அறிவுரைகளாகவே நபிகள் நாயகத்தின் அத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இசுலாமிய மக்கள் அனைவரும் இந்தப் பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தியில், “இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய முன்வந்த இறைத் தூதர் இப்ராஹிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவு கூரும் தினமே பக்ரீத் திருநாளாகும். 

Tamil Nadu Chief Minister MK Stalin wishes Bakrit

இறைவனின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்று உலகிற்கு பறைசாற்றும் பொன்னாள் இந்நாளாகும். நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றிபெற எண்ணற்றத் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும். இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டும் என்று கூறி, அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தியாக வழியில், எனது இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்