2019- ஆம் ஆண்டு புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் இராணுவ விமானங்கள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றன. அப்போது விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தினார். அதேநேரத்தில் பாகிஸ்தானின் எஃப் 16 விமானம் நடத்திய பதில் தாக்குதலினால் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லையில் குதித்த அவரை பாகிஸ்தான் சிறைபிடித்தது. அதன்பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன் பின்னர் அபிநந்தனுக்கு குரூப் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இந்தநிலையில், பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது இன்று (22/11/2021) வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை வழங்கினார்.
இந்நிலையில், வீர் சக்ரா விருதை பெற்ற அபிநந்தனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான்' என்று புறநானூறு பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்து தாயகம் காத்த அபிநந்தன் வர்த்தமான் வீர் சக்ரா விருது பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.