திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் பள்ளியில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியம், கட்டுரை, திருக்குறள், பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 30 மாணவ-மாணவிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பரிசு வழங்கி பாராட்டினார்கள்.
இந்த விழாவில் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, “முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் 180 உலக நாடுகள் கலந்து கொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திக் காட்டினார். அதே போல இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, தேசிய, மாநில ஆசிய விளயாட்டு போட்டி மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்து வருகிறார். இன்று சென்னையில் தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இறுதியாக பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் கல்விக்கு மட்டுமின்றி விளையாட்டுத்துறைக்கும், முதலமைச்சர் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். விளையாட்டுத்துறையில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கால்பந்து, கபடி போட்டிகளில் மிக சிறந்த மாணவர்கள் உள்ளனர். விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்கள் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்” என கூறினார்.
இதில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி. பிரதீப், பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் ஜெயன், திண்டுக்கல் வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், திண்டுக்கல் மாநகர பகுதி செயலாளர்களான ராஜேந்திரகுமார், ஜானகிராமன், சந்திரசேகர் உள்பட கட்சிப்பொறுப்பாளர்களும், அதிகாரிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.