இன்று (14.08.2021) தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆங்காங்கே விவசாயிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடிவருகின்றனர். அதேபோல, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதை வரவேற்கும் விதமாக வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி விவசாயிகளோடு கொண்டாடினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு சட்டம் போட்டு தன்னை வேளாண் கொள்கையிலிருந்து முற்றிலும் விலக்கிக் கொண்டுள்ளது. இந்திய விவசாயிகளைக் கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடிமைபடுத்திவிட்டது. இதனை எதிர்த்து வடமாநில விவசாயிகள் தொடர்ந்து போராடிவருகிறார்கள். இந்தியா முழுவதும் ஆதரித்து அவர்களோடு துணை நின்று போராடிவருகிறோம்.
தமிழக அரசாங்கம் வேளாண் சட்டத்தைக் கைவிட வலியுறுத்தி சட்டமன்றத்தில் ஒத்தக் கருத்தோடு தீர்மானம் நிறைவேற்ற உத்தரவாதம் அளித்திருக்கிறது. இந்நிலையில், இந்திய விவசாயிகள் மத்திய அரசின் விவசாய விரோத சட்டத்தால் ஒட்டுமொத்தமாக விவசாயத் தொழிலில் இருந்து வெளியேற வேண்டுமோ? கார்ப்பரேட்டுகளிடம் அடிமைப்பட வேண்டுமோ? என்கிற அச்ச நிலையில் பரிதவித்துவருகிறார்கள்.
இந்திய விவசாயிகளுக்குத் துணிவை ஏற்படுத்தும் வகையிலும் தமிழகத்தில் விவசாயத்தை தொழிலாக அங்கீகரித்து லாபகரமான தொழிலாக மாற்றும் உயரிய நோக்கோடு தனி பட்ஜெட் தாக்கல் செய்வது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்றைய நாள் விவசாயிகளின் வாழ்க்கையில் கிடைத்த ஒரு பொன்னாள். இன் நன்னாளில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தையும் தமிழக விவசாயிகள் சார்பாக வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம்.
இந்த நிதிநிலை அறிக்கை மத்திய அரசுக்கு சவால் விடுகிற வகையில் விவசாயிகளைப் பாதுகாக்கும் உயரிய நோக்கோடு கொண்டுவரப்படுகிறது. எனவே இதற்கு விவசாயிகள் முழுமையாக துணை நிற்போம். ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருகிறபோது சில கசப்பான உணர்வு கூட இருக்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு விவசாயிகள் நலனை முன்னிறுத்திக் கொண்டுவரப்படுகிற இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை முழு வெற்றிபெற தமிழக விவசாயிகள் துணை நிற்போம், துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
காவிரி பிரச்சனையில் தொடர்ந்து கர்நாடக அரசியல் கட்சிகள் தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஒன்றிணைந்து செயல்படுகிறது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா, தான் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் காவிரி பிரச்சனை தீவிரமடைந்த நிலையில், கர்நாடக சிறைகளில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொடும் தண்டனைக் கைதிகளான குண்டர்களை விடுவித்து கர்நாடகாவில் உள்ள தமிழர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பேருந்துகள் நூற்றுக்கும் மேல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. தமிழர்கள் அகதிகளாக அடித்து விரட்டப்பட்டார்கள். இதுவரையிலும் இதற்குத் தீர்வு கிடைக்காத நிலை தொடர்கிறது.
இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதைத் தொடர்ந்து தமிழகம் எதிர்க்குமேயானால் கர்நாடகம் தமிழகத்திற்கு எதிரான அரசியல் மோதல்களைத் துவங்குவதைத் தடுக்க இயலாது என மிரட்டியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும், அண்டை மாநில உறவுகளையும் சீர்குலைக்கும் செயலாகும். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியும் தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். மோடி அரசு இதனை வேடிக்கை பார்க்கக் கூடாது. இச்செயல் குறித்து மத்திய உள்துறை கர்நாடக அரசிடம் உரிய விளக்கம் கேட்க வேண்டும்.
தமிழக முதலமைச்சர் இதனைக் கண்டிக்க வேண்டும். உடனடியாக மத்திய உள்துறையிடம் அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி புகார் மனு அளிக்க தமிழக அரசு முன் வேண்டும். தமிழர்களையும், அவர்களின் சொத்துக்களையும் காப்பாற்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இனி ஒரு தமிழனும் காயப்படுவதற்கோ, சொத்துக்களில் துளி இழப்பதற்கோ தமிழகம் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்துகிறோம்” என்றார்.