]நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னத்திற்கு பதிலாக தீப்பெட்டி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஒதுக்கியுள்ளது. இதையடுத்து தீப்பெட்டி சின்னத்தை அறிமுகப்படுத்தி வைத்த துரை வைகோ நிருபர்களிடம் கூறும்போது,''திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை தொகுதி முழுவதும். நாங்கள் செல்லும் இடங்களில் மக்கள் முகமலர்ச்சியோடு அனைவரும் உற்சாக வரவேற்க அளிக்கிறார்கள். ஏற்கனவே மக்கள் முடிவு எடுத்துவிட்டனர். இங்கு மட்டும் இல்லை தமிழகம் முழுவதும் பா.ஜனதா வீழ்த்தப்பட வேண்டும், தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று மக்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
இந்த தீப்பெட்டி சின்னம் எளிதில் மக்களிடம் சென்றடையும் சின்னம். ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் சின்னம், எளிய மக்கள் அனைவரும் பயன்படுத்தும் விதமாக தீப்பெட்டி உள்ளது. அதன் காரணமாக அந்த சின்னத்தை தேர்ந்தெடுத்துள்ளோம். தொகுதி முழுவதும் 24 மணி நேரத்திற்குள் தீப்பெட்டி சின்னம் சென்றடையும். இந்த சின்னம் தொடர்பாக கடந்த ஒரு மாதமாக போராடி வந்தோம். பம்பரம் சின்னம் கிடைத்திருந்தால் சந்தோஷம். அடுத்தாக நாங்கள் எதிர்பார்த்த சின்னம் தீப்பெட்டி தான். இந்த சின்னம் கிடைத்ததில் மகிழ்ச்சி.
கூட்டணி கட்சியை பொறுத்தவரை முழு ஆதரவுடன் எங்களிடம் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். அமைச்சர் கே.என்.நேரு உடல்நிலை சரியில்லை என்றாலும் 2 நாட்கள் எங்களோடு வந்து ஆதரவு திரட்டினார். அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்ட தி.மு.க கட்சியினர் எங்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். பா.ஜனதா 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறுகின்றனர்.
அவர்கள் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற துறைகளால் பொய் வழக்குகள் போட்டுத்தான் அவர்கள் அதை செய்ய முடியும். தேர்தல் விதிகள் எல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு தான். பா.ஜனதாவுக்கு எதுவும் கிடையாது. தமிழகத்தில் பா.ஜனதா வேரூன்ற கூடாது என்கிற ஒன்றை கருத்தில் அமைத்து திராவிட இயக்கங்களும் ஒன்று பட வேண்டும் என்பதாலேயே நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம்'' என்றார்.
பேட்டியின் போது கழக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், துணைப் பொதுச் செயலாளர்கள் மருத்துவர் ரொஹையா, தி.மு.இராசேந்திரன், ஆடுதுறை இரா.முருகன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு.பூமிநாதன், மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டி.டி.சி.சேரன், பெரம்பலூர் ஜெயசீலன், கே.கழக குமார், மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் சுமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.