கோடை சீதோஷ்ணம் மாறுதலாகி மழைக்காலம் தொடங்கும்போதே உடன் பூச்சிகளும் வைரஸ்களும் உற்பத்தியாவது இயற்கை தான் என்கிறது விஞ்ஞானம். அதன் தாக்கத்திலிருந்து சுகாதாரத்தைப் பேணி மக்களைப் பாதுகாப்பதே அரசின் கடமை. கடந்த சில பருவ மாற்ற காலங்களில் அரிய வகையான டெங்கு காய்ச்சல் தென் மாவட்டமான நெல்லை குமரி தூத்துக்குடி மாவட்டங்களில் பரவியது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தின் வட பகுதியில் டெங்கு பாதிப்பால் பலர் உயிரிழந்தனர்.
மனித உடம்பின் எதிர்ப்பு சக்தியான லட்சக்கணக்கில் எண்ணிக்கை கொண்டிருக்கும் வெள்ளையணுக்களை உடலில் புகுந்து தின்றொழிக்கிற வைரசை உற்பத்தி செய்வது ஏ.டிஸ் என்ற கொசு. இதன் தாக்குதல் காரணமாக கடுமையான உடல் வலி காய்ச்சல் ஏற்படுகிறது. உயிரைப் பாதுகாக்கிற வெள்ளையணுக்கள் அழிக்கப்பட்டு மரணம் வரை கொண்டு செல்கிற ஆபத்தான கொசு ஏ.டிஸ் தான் டெங்குவின் பிறப்பிடம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பெரும்பாலும் இந்த வகை கொசுக்கள் மழைநீர் தேங்கி நிற்கிற கொட்டாங்கச்சி கழிக்கப்பட்ட பிளாஸ்டிக் டப்பா, மற்றும் கடாசப்பட்ட டயர்கள் போன்றவைகளில் முட்டை வடிவத்தில் காணப்படும் லார்வா கூட்டத்தில் பிறப்பெடுக்கும் புழுக்கள் மூலம் ஏ.டிஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இவைகளைக் கண்டறிந்து சுகாதாரத்துறையினர் அவைகளை அழித்தொழிக்கும் பணியினை மேற் கொண்டாலும், அது பரவுவது நடந்து கொண்டு தானிருக்கின்றன.
இந்த டெங்கு காய்ச்சலுடன் தற்போது டாமி ஃபுளு எனப்படும் பன்றிக்காய்ச்சலும் வர்க்கம் பாராமல் மனிதர்களைத் தாக்குகிறது. கடுமையான தசைவலி மயக்கம் வாந்தி ஓயாத காய்ச்சலை போன்ற கடுமையான உபாதைகளை ஏற்படுத்துகிற பன்றிக்காய்ச்சலும், இது போன்ற வைரஸ்களின் தாக்குதலால் ஏற்படுகின்றன என்கிறது மாநில சுகாதாரத்துரை.
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருந்த போதிலும், பன்றிக் காய்ச்சல் சவாலாகப் பரவி வருகிறது. இதற்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு அந்நோய் கண்டவர்களுக்கு சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று வாரங்களில் பாளை அரசு மருத்துவமனையில் 27 பேர்கள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்ட்டு சிலர் சிகிச்சைக்குப் பின்பு வீடு திரும்பினாலும் அதே அறிகுறியுடன் 7 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
இச்சூழலில் பாளை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த மாசானம் (38) என்பவர் நேற்று முன்தினம் காய்ச்சல் தொண்டை வலியுடன் அனுமதிக்கப்பட்டவருக்கு சோதணையில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு டாக்டர்களின் தீவிர சிகிச்சையும் பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக மரணமடைந்தார்.
இது போன்று தாக்கமிருப்பின் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் அதற்கான மருந்துகள் டாமி ஃபுளு மாத்திரைகள் அங்கு தான் உள்ளன. என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 5 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்கிறார் கலெக்டர் சந்தீப் நந்தூரி.
பன்றிக்காய்ச்சல் எனப்படுகிற FLU.AH1.N1. ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும், 60 வயதிற்கும் மேலுள்ள முதியவர்களுக்கும், கர்ப்பிணி, இருதய பாதிப்பு உள்ளவர்கள், மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளவர்கள் போன்றவர்களுக்கு உடனடி பாதிப்பு வரவாய்ப்புள்ளது. காற்றின் மூலம் இந்த வைரஸ்கள் பரவுவதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அந்நோய் கண்டவர்களிமிருந்து ஒரு மீட்டர் தள்ளி நின்றே பேச வேண்டும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
பத்தமடைப் பகுதியில் ஆய்வு செய்த நெல்லை கலெக்டர் ஷில்பா டெங்கு உற்பத்தி தடுப்புக்கான பணிகளை ஆய்வு செய்தார். டெங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார். ஆனாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொசுக்களை ஒழிப்பதற்கான பூச்சிக் கொல்லி பவுடர்கள் தூவப்படவில்லை, மற்றும் கொசுவை ஒழிக்கிற மருத்துவப் புகை வீச்சு நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படவில்லை என்பதே பொது மக்களின் அதிருப்தி.
காலநேரங்கள் சாதகமாகத் தெரியவில்லை. தடுப்பு நடவடிக்கைகள் பரபரக்க வேண்டிய அவசர காலமிது என்கிற எண்ணமே பரவான எதிரொலிப்பு.