கிரீன்வேஸ் சாலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்," நாங்கள் யாரையும் காப்பாற்றவில்லை, நமக்கு அனைத்துமே சட்டத்தின் கீழ் தான் செயல்படுகிறது என்பதால் யாராவது முறையாக புகார் அளிக்க வேண்டும். அதன் பின் தான் சட்டப்படி அவர்களின் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியும்", என்று எச் ராஜா மற்றும் எஸ் வி சேகரின் அவதூறான கருத்துக்களுக்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தை தெரிவித்தார்.
மேலும் எஸ்வி சேகர், அமைச்சர் ஜெயக்குமார் பத்து வருடங்கள் கழித்து வாய் திறக்கிறார் என்று சொல்லியதற்கு," சமூகத்திற்கு கேடுதான் விளைவிக்கிறார்" என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.
நேற்று எஸ் வி சேகரின் வீட்டை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்களில் ஐந்து பேர் மீது காவலர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால், சேகர் மீது புகார் அளித்தும் இன்றும் வழக்கு தொடரப்படவில்லை என்றதற்கு," அது புகாரின் தன்மையை பொறுத்தது. நேற்று நடந்தது வன்முறை, என்றைக்கும் வன்முறை தீர்வாகாது. ஜனநாயக நாட்டில் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் எதிர்க்கலாம், ஆனால் வன்முறை என்பது தவறானது", என்றார்.
எஸ் வி சேகரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, " அவர் மீது அளித்துள்ள புகார், தனிநபர் உரிமை என்று புகாரில் சொல்லப்பட்ட அனைத்தும் சட்ட மீறல்களாக இருந்தால் கண்டிப்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்", என்று கூறியுள்ளார்.