கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை முற்றிலுமாகத் தடுக்கும் நோக்கத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் அவர்களிடம் தொடர்பில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி உட்கோட்டம் கல்வராயன் மலையில் உள்ள கரியாலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் (தற்சமயம் நெடுஞ்சாலை ரோந்து-2-ல் பணிபுரியும்) ராமலிங்கம் என்ற காவலர் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் இரகசியத் தொடர்பில் இருந்து வந்ததாகக் கண்டறியப்பட்டு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் எஸ்.பி மோகன்ராஜ்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா, குட்கா மற்றும் கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அப்படிப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து, கொண்டு காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காவல் துறையினர் யார் ஈடுபட்டாலோ அல்லது துணை போனாலோ அவர்கள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.