இந்திய எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரரின் மனைவிக்கு சேர வேண்டிய அனைத்துப் பண பலன்களையும் தராமல், கைக்குழந்தையுடன் அவரை அலைய விட்டு வேடிக்கைப் பார்க்கின்றது சிவகங்கை மாவட்ட நிர்வாகம்.
இளையான்குடி அருகிலுள்ள கீழ்க்கண்டனி கிராமத்தினை சேர்ந்தவர் இளையராஜா. 2001ம் ஆண்டு இராணுவப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். 19 மகா ரெஜிமெண்டில் பணியாற்றிய இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் தெற்குப்பகுதியான சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். வீர மரணமடைந்த அவரது வீரமணத்தைப் பாராட்டிய தமிழக அரசு ரூ.20 லட்சத்தை குடும்பத்திற்கு வழங்கியது.
" நானும் அவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவரது இறப்பின் போது நான் மூன்று மாத கர்ப்பமாக இருந்தேன். இப்பொழுது என்னுடைய மகன் குணாளனுக்கு 6 மாதமாகிறது. இறப்பின் போது தமிழக அரசு வழங்கிய ரூ.20 லட்சத்தை அவரது பெற்றொர்கள் பெரியசாமி - மீனாட்சி உள்ளிட்டோர்களுடன் சேர்த்து மூன்றில் ஒரு பங்கான ரூ.6.50 லட்சத்தை எனக்கு கொடுத்தார்கள். அது கடனுக்கே செல்வாயிற்று. அதற்கு பின் அவருக்கு சேரவேண்டிய பண பலன்களைக் கேட்டு சிவகங்கை மாவட்ட படைவீரர்கள் நல சங்கத்தில் விண்ணப்பித்தேன். இந்த சான்றிதழ் செல்லாது.! அந்த சான்றிதழ் செல்லாது.! என கைக்குழந்தையுடன் என்னை அலைக்கழிக்கிறார்களே தவிர இறந்து ஒரு வருடமாகியும் எனக்கு சேரவேண்டிய பணபலன்களை அவர்கள் தரவில்லை. மாவட்ட நிர்வாகம் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை." என்கிறார் இறந்த ராணுவவீரர் இளையராஜவின் மனைவியான செல்வி.
ராணுவ வீரரின் மனைவி கோரிக்கையை நிறைவேற்றுமா மாவட்ட நிர்வாகம்.?