கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் தெற்கு ராஜவீதியில் வசித்து வருபவர்கள் செல்வகுமார் - செல்வி தம்பதியினர். இவர்கள் விருத்தாசலம் கடலூர் ரோடு வேளாண் விற்பனை கமிட்டி வளாக முகப்பில் 13 ஆண்டுகளாக சிறிய அளவில் டீ கடை நடத்தி வருகின்றனர்.
ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இரண்டாவது மகன் பிரேம்குமார் நீட் தேர்வில் 97 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். எட்டாம் வகுப்பு வரை நகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், 10 ஆம் வகுப்பிலிருந்து டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியிலும் தமிழ் மீடியத்தில் படித்து வந்த பிரேம்குமார்
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பில் 975 மதிப்பெண்களும் பெற்று பள்ளியின் முதல் மாணவராக வெற்றி பெற்றுள்ளார்.
எப்போதும் படிப்பதில் ஆர்வமாக இருக்கும் பிரேம்குமார் நீட் தேர்வுக்காக சிறப்பு வகுப்புகளுக்கு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதுகுறித்து பிரேம்குமார் நம்மிடம், " எங்களது குடும்பம் மிகவும் கஷ்டமான குடும்பம். என் பெற்றோர்க்கு டீ கடை மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்துவதற்கே சிரமப்பட்டுதான் வந்தனர். எங்களின் படிப்புக்கென்று செலவு செய்ய முடியாத நிலையில் அரசு பள்ளியிலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளியிலும் தமிழ் மீடியத்தில்தான் படிக்க வைத்தனர். குடும்ப கஷ்டம் அறிந்து படித்தேன். மருத்துவராக வேண்டும் என்கிற இலட்சியமும், ஆவோம் என்கிற நம்பிக்கையும் இருந்தது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கேள்விகள் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் நான் பதினொன்றாம் வகுப்பு பாடங்களையும், பொதுவான பாடங்களையும் படித்ததால் தேர்வில் வெல்ல முடிந்தது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் பெரம்பலூர் மாவட்டம் குழமூர் கிராமத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட. சமூகத்தை சேர்ந்த அக்கா அனிதா உயிரிழந்தார். அக்காவின் கனவை நா ன்நி றைவேற்றியுள்ளதாகவே கருதுகிறேன். பின் தங்கிய பகுதியை சேர்ந்த நான் என்னை போன்ற ஏழை ஏழை மக்களுக்காக மருத்துவத்தை சேவையாக, உதவியாக செய்வேன்" என்கிறார்.
தந்தை செல்வகுமாரோ, " எங்களுக்கு மூன்று பிள்ளைகள். எங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில்தான் படிக்க வைக்க முடிந்தது. மூத்த மகன் பிரதாப்குமார் பொறியியல் படிக்கிறான். 11 ஆம் வகுப்பு படிக்கிறார். இரண்டாவது மகன் பிரேம்குமார். எப்போதும் படிப்பு படிப்பு என்றிருப்பான். செல்போன், டி.வி பக்கம் போகவே மாட்டான். நீட் தேர்ச்சி பெற்றதில் பெருத்த மகிழ்ச்சியடைந்துள்ளோம். அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. பணம் கட்டி படிக்க வைக்கிற நிலையில் எங்கள் வருமானம் இல்லை. ஆனாலும் என் பிள்ளையின் மருத்துவ கனவு நிறைவேற வேண்டும். எங்களை போல கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு மருத்துவசேவை செய்ய வேண்டும்" என்கிறார்.