சேலம் அருகே, மனைவியை கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி ரகு, கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சேலத்தை அடுத்த சின்ன சீரகாபாடியைச் சேர்ந்தவர் லட்சுமி (42). இவருடைய கணவர் ரகு. லட்சுமிக்கு ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் ஆகி, கணவரை பிரிந்து வந்தார். பின்னர் அவர் ரகுவுடன் நெருங்கிப் பழகியதை அடுத்து மூன்றாவதாக அவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.
மேட்டூரைச் சேர்ந்த ரகு மீது 5 கொலை வழக்குகள், ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 33 குற்ற வழக்குகள் காவல்துறை விசாரணையில் உள்ளது. இந்நிலையில், ஜூன் 19ம் தேதி, லட்சுமி தன்னுடைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். உடற்கூராய்வில் அவருடைய உடலில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது தெரிய வந்தது. லட்சுமி கொல்லப்படுவதற்கு முன்பு, கொலையாளிகள் அவருடைய தலை முடியை அறுத்துள்ளதோடு, சித்திரவதையும் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் லட்சுமியை அவருடைய கணவர் ரகுவும், அவருடைய கூட்டாளிகள் நான்கு பேரும் சேர்ந்துதான் கொலை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். ரவுடி ரகு, கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல் மூலம் குவித்த பணத்தில் வாங்கிய சொத்துகளை லட்சுமி பெயரில் எழுதி வைத்திருக்கலாம் என்றும், அந்த சொத்துகளை தன் பெயருக்கு மாற்றி எழுதித்தரக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், லட்சுமிக்கு கடந்த சில மாதங்களாக சின்ன சீரகாபாடியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் நெருக்கமான தொடர்பு இருந்து வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட தகராறிலும் கூட அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து ரகுவை பிடிக்க மாவட்ட காவல்துறை எஸ்பி சிவக்குமார் உத்தரவின்பேரில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது. நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் அவரும் கூட்டாளிகளும் பதுங்கி இருக்கலாம் எந்த தகவலின் பேரில் தனிப்படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். காவல்துறையினர் தன்னை எப்படியும் பிடித்து விடுவார்கள் என்பதை உணர்ந்த ரவுடி ரகு, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ரகு ஜூன் 23ம் தேதி சரணடைந்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் ரகு, ஈரோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். விரைவில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே, தலைமறைவாக உள்ள அவருடைய கூட்டாளிகளை கைது செய்யவும் தனிப்படையினர் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர்.