குமரி திமுகவில் அமைச்சராகவும் மாவட்டச் செயலாளராகவும் தொடர்ந்து கோலோச்சிக் கொண்டிருந்தவர் சுரேஷ் ராஜன். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் நெருக்கமாகவும் இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் மகேஷ்க்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி சுரேஷ் ராஜன் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி, மகேசை பொறுப்பாளராக்கினார் முதல்வர் ஸ்டாலின். இதனால் சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் ஒவ்வொருத்தரையும் ஓரங் கட்டினார் மகேஷ்.
இதற்கிடையில் ஏற்கனவே சுரேஷ் ராஜனுக்கும் மந்திரி மனோ தங்கராஜுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய மனோ தங்கராஜ் மகேஷுடன் சேர்ந்து உட்கட்சி தேர்தலில் பொறுப்பிலிருந்த சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் அந்தப் பொறுப்புகளிலிருந்து தூக்கினார்கள். இதில் ஒரு கட்டத்தில் சுரேஷ் ராஜனிடம் நெருக்கமாக இருந்த பலர் அவரை விட்டுவிட்டு மகேஷ், மனோ தங்கராஜிடம் ஓட்டம் பிடித்தனர்.
மேலும் உட்கட்சி தேர்தலில் மா.செ. க்கு போட்டியிடக் கட்சித் தலைமை மகேஷ்க்கு மட்டும்தான் பச்சைக்கொடி காட்டியது. இதனால் கடும் அதிருப்தி ஆனார் சுரேஷ் ராஜன். முதல்வர் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்த சுரேஷ் ராஜன் கட்சிக்குச் செய்த தவற்றால் இனி கட்சியில் எந்த பொறுப்பும் அவருக்குக் கிடைக்காது எனப் பரவலாகப் பேச்சும் எழுந்தது. இந்தக் காரணத்தால் தான் முதல்வரே தேதி கொடுத்து முடிவு செய்யப்பட்ட சுரேஷ் ராஜனின் மகனின் திருமணத்துக்குக் கூட முதல்வர் ஸ்டாலின் வரவில்லை என்றனர்.
இந்த நிலையில்தான் சுரேஷ் ராஜனுக்கு கட்சியில் தணிக்கைக்குழு உறுப்பினர் என்ற மாநில பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓரங்கட்டப்பட்டிருந்த சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சென்னையிலிருந்து இன்று (29-ம் தேதி) நாகர்கோவில் வந்த சுரேஷ் ராஜனுக்கு வடசோியில் அவரின் ஆதரவாளர்கள் செண்டை மேளத்துடன் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு திமுக பொறுப்பில் ரீ என்ட்ரி ஆகியிருக்கும் சுரேஷ் ராஜன் மகேசையும் மனோ தங்கராஜையும் சமாளித்து அரசியல் செய்வாரா? அல்லது அவர்களுடன் இணைந்து செயலாற்றுவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.