Skip to main content

“நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 06/09/2024 | Edited on 06/09/2024
Supreme Court order Interim stay on the order issued by Justice Anand Venkatesh

கடந்த 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 44 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகசுந்தரம் ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. அதேபோல் வருமானத்திற்கு அதிகமாக 76 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால் இந்த வழக்குகளில் விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.

இதனையடுத்து கீழமை நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு மீதான வழக்குகளைச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த மாதம் 7ஆம் தேதி  (07.08.2024) பிறப்பித்திருந்த உத்தரவில், “அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அவர்களை விடுத்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லாது. எனவே இந்த சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தால் நாள் தோறும் நடத்த வேண்டும். அமைச்சர்கள் இருவரும் செப்டம்பர் 9 ஆம் தேதி (09.09.2024) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

Supreme Court order Interim stay on the order issued by Justice Anand Venkatesh

இத்தகைய சூழலில் தான் இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (06.09.2024) நீதிபதி ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர்கள் சார்பில் வாதிடுகையில், “சென்னை உயர்நீதிமன்றம் வழக்கைத் தவறாக விசாரணைக்கு எடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நீதிபதிகளுக்கும் இந்த வழக்கைத் தான் விசாரிக்க வேண்டும் என்ற அதிகாரம் இருக்கிறது. அமைச்சர்கள் தொடர்பான வழக்கு என்பது இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனி நீதிபதியாக இருந்து உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இது எல்லாம் விதிமுறைகளுக்கு எதிரானது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக உள்ள தமிழக அரசு மற்றும்  காவல்துறையினர் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டனர். 

சார்ந்த செய்திகள்