கர்நாடகாவின் நந்திதுர்க்கத்தில் உருவாகும் தென்பெண்ணையாறு கர்நாடகாவில் கோலார் வழியாக கர்நாடகாவில் 112 கி.மீ பயணமாகி, தமிழகத்தில் ஒசூர் அருகே நுழைகிறது. தமிழகத்தில் 320 கி.மீ பாய்ந்து சென்று இறுதியில் வங்காளவிரிகுடாவில் சங்கமிக்கிறது தென்பெண்ணையாறு. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் என 5 மாவட்ட விவசாயம் இதன் வழியாகத்தான் 40 சதவிதம் நடைபெறுகிறது.
அதோடு, கெலவரப்பள்ளி நீர்தேக்கம், கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, திருக்கோவிலூர் அணை, சொர்ணவாரி அணை, எல்லீஸ் அணை போன்றவற்றின் மூலமாக பல லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறுகிறது. அதோடு, இந்த மாவட்டங்களின் 50 சதவித குடிநீர் தேவையை இந்த அணைகள் தான் தீர்க்கின்றன.
இந்த தென்பெண்ணையாற்றின் துணை நதிகளாக மார்கண்டநதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு போன்றவை உள்ளன. இதில் மார்கண்டநதி என்பது கர்நாடகாவில் உள்ளது. இந்த நதியில் இருந்து தென்பெண்ணையாற்றுக்கு தண்ணீர் வருவதை தடுக்கும் விதமாக 50 அடி உயரத்துக்கு தடுப்பணை என்கிற பெயரில் அணை கட்ட முடிவு செய்தது கர்நாடகா அரசாங்கம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது தமிழகரசு.
குடிநீர் தேவைக்காகவே தடுப்பணை கட்டுகிறோம் எனச்சொல்லியது கர்நாடகா. தமிழகம் அதற்கு சரியான பதிலை நீதிமன்றத்தில் முன்வைக்காத காரணத்தால் தடுப்பணை கட்ட தடையில்லை என நவம்பர் 14ந்தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. இந்த உத்தரவு வடாற்காடு, தென்னாற்காடு மாவட்ட விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.