கடந்த 2010ம் ஆண்டு கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த சிறுமி முஸ்கான் மற்றும் சிறுவன் ரித்திக் ஆகியோர் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் உடல்கள் பொள்ளாச்சி அருகே மீட்கப்பட்டன. பின்னர் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் சிறுமி முஸ்கான் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
அதனையடுத்து நடைபெற்ற போலீஸ் விசாரணையில் வாடகை கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரும், அவரது நண்பன் மனோகரனும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போலீசாரின் தீவிர விசாரணையில் குற்றவாளிகள் மோகன்ராஜும், மனோகரனும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது போலீஸ் காவலிலிருந்து மோகன்ராஜ் தப்பிக்க முயன்றபோது போலீசார் அவரைச் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் குறித்து மனித உரிமைக் குழு கேள்வி எழுப்பியது. ஆனால், பல இடங்களில் பொதுமக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
பின்னர் மனோகரன் சிறையில் அடைக்கப்பட்டான். இந்த வழக்கைக் கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் பள்ளிச் சிறுவர்களைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியான மனோகரனுக்கு இரட்டை தூக்குத் தண்டனையும், மூன்று ஆயுள் தண்டனையும் விதித்துக் கடந்த 2012, நவம்பர் 1ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் மனோகரன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மோகன்ராஜ் , மனோகர் இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், சஞ்சீவ் கன்னா, சூரிய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் யோகேஷ் கன்னாவும், குற்றவாளி மனோகரன் தரப்பில் வழக்கறிஞர் பி.வினாய் குமாரும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். பின்னர் மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது வாதங்களை ஆய்வு செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மரண தண்டனையை நாங்கள் உறுதி செய்கிறோம் என்று ஒரு வரியில் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்துவைத்தனர்.
இதனையடுத்து குற்றவாளி மனோகரன் தனது தூக்கு தண்டனையை குறைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தான். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் மனோகரின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதிபடுத்தி இருக்கிறது.
இதுகுறித்து ரிஸ்கான் முத்திகின் குடும்ப நண்பர்கள் அசோக் பேசும்போது,
மனோகரின் தூக்கு தண்டனையை வரவேற்பதாகவும், அதை தள்ளிப்போடாமல் உடனடியாக தூக்குதண்டனையை நிறைவேற்ற வேண்டுமென குழந்தையின் குடும்ப நண்பர்கள் நீதிமன்றத்தை வேண்டி கேட்டுக்கொண்டனர். மேலும் இத்தீர்ப்பு 9 வருடங்கள் தள்ளி கிடைத்திருப்பதால் உடனே அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.